Monday, October 30, 2017

அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டியான வெ.பொன்ராஜ் சமூகப் பிரக்ஞை உள்ளவர். நாட்டில் நிலவும் அரசியல் தட்பவெப்பத்துக்கு ஏற்ப, அவ்வப்போது தனது கருத்துக்களை வெளியிட்டு வருபவர். மெர்சல் பரபரப்பின் தாக்கமோ என்னவோ, ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார். அனல் பரக்கும் அவரது கருத்துக்கள் இதோ -

முதலமைச்சர் எங்கு கிடைக்கிறார்?

பாமரனும், படித்தவனும் சினிமா நடிகனைத் தேடுகிறான்.    பணம் படைத்தவனும், அரசியல்வாதியும் சாமியாரைத் தேடுகிறான்.  நடிகன், அரசியல்வாதி, சாமியார் ஆகிய மூவரும் ஊடக வெளிச்சத்தை தேடுகிறார்கள். ஊடகமோ, இந்த மூடர்களிடம் நாட்டின் அனைத்து மக்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தேடுகிறது. தினமும் பிரேக்கிங்  நியூஸ் போட்டு விவாதிக்கிறார்கள், கடைசியில் இவர்களிடம் இருந்து முதலமைச்சரைத் தேடுகிறார்கள்.

வெட்கப்பட வேண்டிய நிலையில் இளைஞர்களும், மாணவர்களும் இருக்கின்றனர்.  இந்தக் கூத்தை  பொதுமக்களும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  தேர்தல் வரும் போது மீடியாவில் வெளியாகும் செய்தியைப்  பார்த்து,  பணம் கொடுப்பவனைப் பார்த்து ஒட்டு போட காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியென்றால், தேவைகள் என்னென்ன?  மீடியா பலமும், பணபலமும்  இருந்தால் முதலமைச்சா் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள் இன்றைய வருங்கால முதலமைச்சர் வேட்பாளர்கள்.

ஏமாறும் பாமரன்!

பாமரன் தன் கவலையை மறக்க, பொழுதுபோக்க சினிமாவிற்குச் செல்கிறான்.  அட்டைக் கத்தி கதாநாயகனிடம், தன் பிரச்சினையைத்  தீர்ப்பதற்காக,  ஒரு தலைவனைத்  தேடுகிறான். ஏழைகளைப் பற்றி சிந்தித்து, வள்ளலாக வாழ்ந்த, சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இல்லாமல் திரையிலும், நிஜத்திலும் வாழ்ந்த,  எம்.ஜி.ஆரை தேடுகிறான்.  அந்த  எம்.ஜி.ஆரின் குணத்தை இன்றைய திரை நட்சந்திரங்களிடம் காண முடியுமா?   அதனால், நிஜத்திலும் நடிக்கும்  ஒரிஜினல் நடிகர்களிடம் ஏமாந்துவிடுகிறான்.

தமிழ் நாட்டில் படித்தவன், வேலை இல்லாமல் நடுத்தெருவில் நிற்பவன், தன் ஆதங்கத்தை சினிமா நடிகர்கள் யாராலோ எழுதிக் கொடுக்கப்பட்ட வசனத்தை வைத்து, இந்த அரசியல்வாதிகளின் அநியாயத்தை இவனே தட்டி கேட்பதாக நினைத்து,  கை தட்டிப் பொழுதைப் போக்கிவிட்டு, ஆதங்கத்தையும் போக்கிகொள்கிறான். கிடைத்த வேலையைப் பார்த்து தன் காலத்தையும் ஓட்டுகிறான்.

செல்பி தமிழனின் பரப்புதல்!

வெளிநாட்டில் வேலை பார்த்து ஏதோ கொஞ்சம் வசதியுடன் வாழ்பவன், அட்டைக் கத்தி நடிகனைப் போல, அவனது ஸ்டைலில், புகழ் வெளிச்சத்தில் தன்னை இணைத்து, அவனது உலகத்தில் தன்னை வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ள, பணத்தைக் கொடுத்தாவது செல்பி எடுத்து,  தன்னைப்பற்றி பரப்பிக்கொள்ள அலைகிறான்.

தமிழ் மொழிக்காக கொடுப்பதைக்காட்டிலும், சினிமா நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பணம் கொடுப்பவர்கள் இன்றும் வெளிநாட்டில் அதிகமாக இருக்கின்றனர்.  இது தான் தமிழர்களின் தலையெழுத்து என்றாகிவிட்டது.

அதை இந்த நடிகர்கள் சரியாகப் பயன்படுத்தி ஆடியோ ரிலீஸ், வீடியோ ரிலீஸ், செல்பி, சுசி லீக்ஸ், காபி வித் நடிகர் என்று படித்த வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்.  இது ஒரு சினிமா கார்ப்பரேட் கொள்ளையாக, பிரம்மாண்ட விழாவாக நடக்கிறது. அதையும் டிவி ஊடகத்தில் விளம்பரதாரர் நிகழ்சியின் மூலம் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கின்றனர். சாதாரண மக்களும்  வேலையைப் போட்டு விட்டு, கட்டணம் செலுத்திப் பார்த்து,  பொழுது போக்குகிறார்கள்.

பொழுதுபோக்கும் நாடுகள் வளராது!

வார நாட்களில் ஒரு மணி நேரத்தைக்கூட வீணாக்காமல் வேலை செய்துவிட்டு, சனி, ஞாயிறு விடுமுறைகளில் மட்டும் பொழுதுபோக்கும் நாடுகள் அனைத்தும் வளர்ந்த நாடுகளாகவே இருக்கின்றன. வளரும் நாடுகளை  வளரவிடாமல் செய்ய வேண்டுமென்றால்,  பொழுது போக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடாக மாற்றினால் போதும். அந்த நாட்டை எளிதில் பிடித்து அழித்துவிடலாம், அதன் வளங்களையும் கொள்ளை அடித்துவிடலாம்.  இன்றைய ஊடகங்கள் அதிகமாகப் பொழுதைப்போக்கும் ஊடகங்களாக, மக்களின் உழைப்பை திருடிக்கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் இதை அழகாகத் திட்டமிட்டு செய்துகொண்டிருக்கின்றன. பொழுது போக்கையையே பிழைப்பாகக் கொண்ட நாடுகள்  எப்போதும் வளர்ச்சி அடையாத நாடுகளின் பட்டியலிலேயே இருக்கும்.

டிவி ஊடகத்தில் சினிமா மயம், சின்னத்திரை சீரியல் மயம், செய்தி ஊடகத்தில் சினிமா மயம், வெளிநாட்டிலும் சினிமா மயம். பொழுதுபோக்கு என்றாகிவிட்டன.  இது தான் தமிழனின் பலவீனம் என்று அறிந்து கொண்டு இவர்களை வைத்தே அனைவரும் அரசியலை நகர்த்துகிறார்கள்.  ஏனென்றால் இவர்களிடம் தான் பணம் புழங்குகிறது. அடுத்து ஊழலில் திளைத்த அரசியல் வாதிகளிடமும் பணம் புழங்குகிறது, அதனால், பெரும்பாலான மீடியாக்கள் இவர்கள் பின்னால் நிற்கின்றன. சில சுயநல நடிகர்களும், சில சுயநல சாமியார்களும் ,  தன்னிடம் இல்லாததைத் தேடி அலையும் மேற்கண்டவர்களிடமிருந்து,  தன்னால் முடிந்த மட்டிலும் கொள்ளை அடிக்கிறார்கள்.

 பாமரனை ஏமாளியாக வைத்திருப்பதே அரசியல்!

மக்களின் பொழுது போக்கும், புகழுக்கு மயங்கும் பலவீனமும், தன்னைப்பற்றிய பயமும், பாதுகாக்க வேண்டிய கள்ளப்பணமும்,  செல்வமும் இங்கு அரசியல், சினிமா, ஊடகத்தால் வியாபாரம் செய்யப்படுகின்றன. இந்த மூன்றிலுமே,  பணம் படைத்தவன் வெற்றி பெறுகிறான்.

இதில் பணம் கொடுப்பவனே ஏமாளி.  கடைசி வரை இவன் ஏமாளியாகவே இருந்துவிடுகிறான். ஏனென்றால்,  இவனை  ஏமாளியாக வைத்திருப்பதே,   அரசியல், சினிமா, மற்றும் ஊடகங்களின் விருப்பமாக இருக்கிறது.  அதனாலேயே,   அவனை சினிமா ரசிகனாக, அரசியல் தொண்டனாக ஊழலில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான்.  இவர்களை ஏமாற்றி பணம் வாங்குபவன்,  சினிமா மூலமும், பக்தியின் மூலமும் பணத்தை கொள்ளை அடித்து ஊடக வெளிச்சத்தில் மக்களின் ரட்சகனாக, ஆபத்பாந்தவனாக, அரசியல் தலைவனாக, முதலமைச்சராக, தங்களைக் காட்டிக்கொள்ளத் துடிக்கின்றனர்.

இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை!

இதை மாற்ற வேண்டிய மிகப்பெரிய கடமை  நம் அனைவருக்கும் இருக்கிறது, நமக்காக அல்ல, நம்  வருங்கால சந்ததி அமைதியாக உழைத்து, செழிப்பாக, பாதுகாப்போடு வாழ வேண்டுமென்றால், விழிப்புணர்வு அவசியம். தமிழகத்தை விழிப்புறச் செய்வோம்! இவ்வாறு கூறியிருக்கிறார் பொன்ராஜ்.

- சி.என்.இராமகிருஷ்ணன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer