Monday, October 23, 2017

தேசிய கீதம் இசைக்கப்படும்போது நாம் என்ன செய்வோம்? எழுந்து நிற்போம். நாட்டு வணக்கப்பாடலை நாமும் சேர்ந்து பாடுவோம். திருத்தங்கல்லிலோ, தேசிய கீதம் இசைத்தபோது, பெண்கள் இருவர் தங்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டனர். அதுவும், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படிச் செய்தனர். பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அந்தப் பெண்கள் ஏன் தீக்குளிப்பதற்காகத் தேர்வு செய்ய வேண்டும்? இதன் பின்னணியில், திட்டமிட்ட ஒரு கிரிமினல்த்தனம் இருக்கிறது.

கிரிமினல்களோடு சேர்ந்துகொண்டு,  கத்தியைக் காட்டி மிரட்டி செயின் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டதால் சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளானவர்  காவேரிமணி என்ற போலீஸ்காரர். இவரது கூட்டாளிதான் ராஜபாளையம் இந்திரா காலனியைச் சேர்ந்த முனியசாமி. இவர் மீது ராஜபாளையம் வடக்கு, தெற்கு காவல்நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. தேடப்படும் குற்றவாளியான முனியசாமி தலைமறைவான நிலையிலும், தன் வீட்டுக்கு வந்து போகும் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது.  அதனால், அவனைத் தேடி, அவனது வீட்டுக்கு அடிக்கடி போலீசார் சென்றனர். போகும்போதெல்லாம், அவனது மனைவி கனகலட்சுமியிடம் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கின்றனர்.

இதனால் வெறுத்துப்போன கனகலட்சுமி, அம்மா பார்வதியிடம் தன் நிலையைச் சொல்லி அழுதிருக்கிறார். கணவன் முனியசாமி தலைமறைவாகி எங்கும் சென்றுவிடவில்லை. போலீஸ்காரர்கள்தான் விசாரணை என்ற பெயரில் எங்கோ மறைத்துவைத்து முனியசாமியை டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்று அவர்களாகவே ஒரு முடிவு எடுக்கிறார்கள். முனியசாமி மட்டுமல்ல.. தாங்களும்  காக்கிகளின் கடுமையான விசாரணையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று பார்வதியும் கனகலட்சுமியும் துடித்தார்கள். இவர்களுக்கு பக்காவாக திட்டம் தீட்டிக் கொடுத்திருக்கிறது ஒரு கிரிமினல் மூலை. முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில், நாட்டுப்பண் இசைக்கப்படும்போது, அனைவரும் எழுந்து நிற்பார்கள்.

அந்த நேரத்தில் முன்னேறி, பத்திரிக்கையாளர் பகுதிக்குச் சென்றுவிட வேண்டும். மறைத்து வைத்திருக்கும் மண்ணெண்ணெய் கேனைத் தலையில் கவிழ்த்துவிட வேண்டும். மண்ணெண்ணெய் வாசம் கூட்டத்தினரை நிலைகுலைய வைக்கும். தீக்குச்சியைப் பற்ற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குள்ளாக, பக்கத்தில் இருப்பவர்கள் தடுத்துவிடுவார்கள். இது நடந்துவிட்டால் போதும். பத்திரிக்கைகளில் பெண்கள் இருவரும் ஃப்ளாஷ் ஆகிவிடுவார்கள். அதன்பிறகு,  காக்கிகள் தொல்லைதர மாட்டார்கள் என்று ‘ஸ்கெட்ச்’ போட்டுக் கொடுத்திருக்கிறது அந்தக் கிரிமினல் மூலை. பார்வதியும், கனகலட்சுமியும் அவ்வாறே செய்துவிட்டனர்.

“போலீஸ் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். காவல்துறையினருக்கு வெளிப்படையான மிரட்டல் இது.  முதல்வர் விழாவிலேயே பாதுகாப்பில் இத்தனை குளறுபடிகளா? என்று கேலி பேசும் நிலைக்கு ஆளாகிவிட்டது தமிழக காவல்துறை.“ என்று நம்மிடம் வெறுத்துப் போய்ச் சொன்னார் ஒரு உயர் போலீஸ் அதிகாரி.

தமிழக காவல்துறை மட்டுமல்ல,  தமிழ்நாடே பரிதாப நிலையில் இருப்பதைத்தான் இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer