“இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடாது எனக் கூறுவது, நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை தவறாக வழிநடத்துவதாக அமையும்.” என்று ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட தூதுவர் பப்லோ டி கிரிப் தெரிவித்துள்ளார்.
நிலைமாற்றுகால நீதி செயற்பாடுகள் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதுடன், சகலருக்கும் நீதியை வழங்கக் கூடிய பொறுப்புக்கூறல் பொறிமுறையில் நிபுணத்துவம் பெற்ற நாடுகளுடன், உடன்பாடுகளுக்குச் சென்று உதவிகளைப் பெற்றுக் கொள்வது அடிப்படையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட தூதுவர், தன்னுடைய விஜயத்தின இறுதி நாளான நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “போர் வீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடாது எனக் கூறப்படுவதானது நிலைமாற்றுகால நீதி பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை தவறாக வழிநடத்துவதாக அமைந்துவிடும். மனித உரிமை மீறல்கள் அல்லது யுத்த விதிகளை மீறியவர்கள் வீரர்கள் அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது. பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இராணுவத்தினரையும் உள்ளடக்குவது முக்கியமானதாகும்.
இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதால் இராணுவத்தினரை பொறுப்புக்கூறல் பொறிமுறையிலிருந்து விலக்கிவைக்கக்கூடாது.
அத்துடன், பொறுப்புக்கூறல் பொறிமுறையானது நம்பகமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் கருத்துக்களைக் கொண்டதாக இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட சகல தரப்பினரினதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக பொறுப்புக்கூறல் பொறிமுறை இருப்பது அவசியமானது.
நிலைமாற்றுகால நீதியில் பொறுப்புக்கூறல் என்பது தனிப்பட்ட விடயம். இது தவிரவும், உண்மையை அறிதல், அநீதி மீளவும் நிகழாமை, நஷ்டஈடு வழங்குதல் போன்ற முக்கிய விடயங்கள் இருக்கின்றன.
பொறுப்புக்கூறல் பொறிமுறையின் உபபிரிவுகளாக இவற்றைக் கொள்ள முடியாது. இவை ஒவ்வொன்றும் உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டும். நிலைமாற்றுகால நீதி செயற்பாட்டில் மந்த கதியிலான முன்னேற்றமானது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது நிலைமாற்றுகால நீதியில் இலங்கைக்கு நன்மையை இழக்கச் செய்துவிடும்.
பொறுப்புக்கூறல், உண்மையை கண்டறிதல், மீண்டும் நிகழாமை, நஷ்டஈடு வழங்குதல் போன்ற நான்கு விடயங்களையும் நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு இரண்டு வருட காலங்கள் கோரப்பட்டது. அரசாங்கத்தினால் தாமாக முன்வந்து கோரப்பட்ட காலவரையறை இதுவாகும். இவ்வாறான நிலையில் மேலும் இரண்டு வருடங்கள் இரண்டாவது பிரேரணையின் மூலம் கோரப்பட்டுள்ளது.
இந்த நான்கு முக்கிய விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு விரிவான திட்டங்கள் இல்லாமையால் நிலைமாற்று கால நீதி செயற்பாடு முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொறுப்புக் கூறல் பொறிமுறையில் கிரிமினல் பக்கத்தில் மாத்திரம் கவனம் செலுத்தப்பட்டு, நீதிபதிகளின் இனம் தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்கும் செயற்பாடுகள் இழுபட்டுவருகின்றன. இதற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மாற்றப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதில் தாமதம் காணப்படுகிறது. மேலும் காலதாமதமாவது நிலைமாற்றுகால நீதி செயற்பாட்டில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது.
இதேவேளை, அண்மையில் பிரேசிலில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. பொறுப்புக்கூறல் என்பது இங்கிருந்தாலும் சரி வெளிநாட்டிலிருந்தாலும் சரி பொருத்தமானது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே, வலுவான மற்றும் நம்பகமான நிலைமாற்றுகால நீதி கொள்கையில் இராணுவத்தினரின் முழுமையான ஒத்துழைப்பும் இருப்பது அவசியம்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என்று கூறுவது நிலைமாறுகால நீதியை தவறாக வழிநடத்தும்: பப்லோ டி கிரிப்
Tuesday, October 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment