Thursday, October 5, 2017

வரும் 2018ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசும் இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. இது தொடர்பான மத்திய அரசின் யோசனைக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தனது ஆதரவை தெரிவித்தது.

இது தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பாராளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வசதிவாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம், சட்ட ஆணையம் கருத்து கேட்டது. தேர்தல் ஆணையத்தின் கருத்துகள், சட்ட அமைச்சகத்துக்கும், பாராளுமன்ற நிலைக்குழுவுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வருட தொடக்கத்தில் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் வழங்குதலுக்கான உத்திகள் பற்றி கருத்தரங்கில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, எதிர்காலத்தில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். ஆனால் 2 முக்கிய நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தி, இது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அடுத்து, மின்னணு ஓட்டு எந்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பொறுத்தமட்டில் அவற்றை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவை என்றுள்ளார்.

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்துக்கு ஏற்ப, நாட்டில் உள்ள மாநில சட்டசபைகளில் சிலவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் வேண்டி வரும், சில சட்டசபைகளின் ஆயுளை முன்கூட்டியே முடிக்கவும் வேண்டி வரும். இதற்குத்தான் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

இப்போது 2018 செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer