Friday, October 27, 2017

“நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படாவிட்டால், தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இணங்க சமஷ்டிக்கான அழுத்தங்களை சர்வதேசம் வழங்கும். அது, நாட்டுக்கு பேராபத்தானது” என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. சிங்கள மக்களின் பலத்த எதிர்ப்பைக் கருத்திற்கொண்டு 13வது திருத்தத்தை அரசாங்கம் அமுல்படுத்தாமல் உள்ளது. ஆயினும், சர்வதேச அழுத்தம் தீவிரமாகும் பட்சத்தில் அதற்கான வாய்ப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்று கூறுபவர்கள் நடைமுறையிலுள்ள ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கின்றார்களா என்று நான் கேட்க விரும்புகின்றேன். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், மாகாண சபைகள் அதிகாரம் என்று அதிகாரப்பகிர்வுக்கான அத்தனை அம்சங்களும் இந்த யாப்பின் 13வது திருத்தத்தில் உள்ளது. 13வது திருத்தம் நாட்டைப் பிரித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற பாதகமான அம்சங்கள் இதில் உள்ளதை மறந்துவிட்டு அனைவரும் கூச்சலிடுகின்றனர். 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு வடக்கு மக்களின் கோரிக்கை உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. வடக்கு மக்களின் போராட்டமும், சர்வதேச அழுத்தமும் ஒன்றிணைந்து தீவிரமடையும் பட்சத்தில் பிரிவினைக்கான ஆபத்துகள் அதிகரிக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டதும், புதிய தேர்தல் முறைகள் கொண்டதுமான புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமாக உள்ளது. ஆயினும், புதிய அரசியலமைப்பு குறித்த வரைபுப் பிரதிகள் கூட இல்லாத நிலையில் புதிய அரசியலமைப்பால் நாடு பிளவடையும் என்று கூச்சலிடுவது வேடிக்கையான விடயமாகும்.

புதிய அரசியலமைப்புக்கான வரைபுப் பிரதி இருக்குமாயின் நாம் அதனைப் பற்றி ஆய்வு செய்யலாம்; கலந்துரையாடலாம். ஆனால், அதற்கான வாய்ப்பில்லை. இல்லாத ஒரு விடயத்தைப் பற்றிப் பேசுவது அர்த்தமற்றது என்றே நாங்கள் கருதுகின்றோம்.

புதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், பொதுஜன வாக்கெடுப்பும் அவசியம் என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. இதுநாள்வரை அமுலில் இருந்த அரசியலமைப்புகள் யாவும் பதவியிலிருந்த அரசாங்கங்கள் வலிந்து மக்கள்மீது திணிக்கப்பட்டவை. ஆனால், இம்முறை அவ்வாறன்றி மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படுவதை சாதகமான அரசியல் போக்காகவே நாங்கள் பார்க்கின்றோம்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்புத்தான் எங்கள் இலக்கு. இந்த வாக்குறுதியை அளித்தே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. மேலும் தான் மற்றுமொரு தடவை போட்டியிடப்போவதில்லை என்ற வாக்குறுதியுடன்தான் ஜனாதிபதி மைத்திரிபால பதவியில் அமர்ந்தார். சட்டரீதியில் அவர் மற்றுமொரு ஜனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிட வாய்ப்பிருப்பினும், அவர் அளித்த வாக்குறுதிக்கேற்ப அவரால் போட்டியிட முடியாது. அவ்வாறு அவர் மீறி போட்டியிடுவாராயின் ஜே.வி.பி. அதனை வன்மையாக எதிர்த்துப் போராடத் தயங்காது.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer