Wednesday, October 18, 2017

“புறக்கணிப்புக்கள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில் தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்.”

கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டவாறு தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடர் போராட்டம் இடம்பெற்று வந்தது. ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்தும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை வேலையில்லாப் பட்டதாரிகள் விரிவுபடுத்தியிருந்தனர். இந்தப் பின்னணியிலேயே ஜனாதிபதியின் உரை மேற்கண்டவாறு அமைந்திருந்தது.

கடந்த சனிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தின விழாவிற்காக வருகை தந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், கல்லூரிக்கு அண்மையில் கறுப்புக்கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை வடக்கில் கடையடைப்பு (புறக்கணிப்புப்) போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன், தொடர்ச்சியாகவே ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டம் நடைபெறப்போகின்றமை தொடர்பில் ஜனாதிபதியும், அவரது பாதுகாப்புப் பிரிவினரும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனர். அதன்போக்கில், யாழ். இந்துக் கல்லூரிக்கு வரும் வழியில், ஜனாதிபதி தன்னுடைய வாகனத்திலிருந்து இறங்கி வந்து, போராட்டக்காரர்களுடன் பேசினார். அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில தலைவர்கள், ஜனாதிபதியோடு பேசுவதைத் தவிர்த்த போதிலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கடும் தொனியிலான உரையாடலை ஜனாதிபதியோடு நிகழ்த்தினர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பினையும், அவர்கள் நிராகரித்தனர்.

இந்தப் பின்னணியில், யாழ். இந்துக் கல்லூரி மேடையில் பேசிய ஜனாதிபதி, “நான் இங்கு வரும் போது எனக்கு எதிராக கறுப்பு கொடி காட்டினார்கள். உரத்து சத்தம் போட்டார்கள். எனினும், நான் அவர்களை பார்க்கப் போனேன். ஏன் என்று கேட்டேன். விடயத்தை சொன்னார்கள். பிரச்சனைகள் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு வர சொல்லிக்கேட்டேன். அது முடியாது, இப்போதே கோரிக்கைக்கு முடிவு தாருங்கள் என கோருகிறார்கள்.

எந்த பிரச்சனை என்றாலும் அனைத்து தரப்புடன் பேசித்தான் ஆக வேண்டும். என்னுடன் பேசலாம். முரண்பாடு ஏற்படுத்த கூடாது, வன்முறை வேண்டாம். இங்கு கறுப்பு கொடி உயர்த்த தேவை இல்லை. சமாதானத்துக்காக வெள்ளை கொடி உயா்த்த வேண்டும்.

விரோதம் வன்முறை ஏற்படுத்தினால் சக்தி பெறுவது வேறு ஆட்கள் தான். அனைத்து இனங்கள் மத்தியிலும் சகோதரத்துவம் ஏற்படுத்தவே நான் செயற்படுகிறேன். அனைவருக்கும் ஒரு நியாயம் ஏற்படுத்த தான் செயற்படுகிறேன். என்னை பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்களுக்குத்தான் பலம் கூடும்.” என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்ப்பது பற்றி தொடர்ச்சியாக பேசி வருகின்றார். அதுவும், தன்னை நாட்டின் அனைத்து இன மக்களும் இணைந்தே ஜனாதிபதியாக்கினார்கள் என்றும் கூறி வருகின்றார்.

ஆனால், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்ப்பது என்பது பிரச்சினைளுக்கு தீர்வுகளைக் காணாது தட்டிக்கழிப்பதன் மூலம் நிகழ்ந்துவிடாது. அது, மீண்டும் மீண்டும் பிளவுகளுக்கும் முரண்பாடுகளுக்குமே வழி வகுக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலிருந்துதான் நல்லிணக்கம் என்கிற பயணத்தை ஆரம்பிக்க முடியும். அதுதான், சகோதரத்துவம் என்கிற பெரும் இலக்கை நோக்கிய அடித்தளமாகவும் இருக்கும். மாறாக, 70 ஆண்டுகளுக்கும் மேலாக முரண்பாடுகள் முட்டி மோதி வளர்ந்திருக்கின்ற நிலையில், பிரச்சினைகளை தட்டிக்கழித்துக் கொண்டு நல்லிணக்கம் பேசுவதில் என்ன நியாயம் இருக்கின்றது என்பதை தென்னிலங்கையும், அதன் ஆட்சி அதிகார பீடங்களும்தான் சொல்ல வேண்டும்.

தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்ற தரப்பாக பிரச்சினைகளுக்கான தீர்வினை தமிழ் மக்கள் கோருகின்ற போதெல்லாம், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தின் வழி திறந்திருக்கின்றது, போராட்டங்களை நடத்த அனுமதித்துள்ளேன், வெள்ளைவான் அச்சுறுத்தல் இல்லை என்று கூறிக்கொள்வதன் மூலம் மைத்திரிபால சிறிசேன என்ன கூற வருகின்றார்?

மூடப்பட்ட ஜனநாயகக் கதவுகளை திறப்பதையோ, மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வழங்குவதையோ, தன்னை ஜனநாயகத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் பெரியதொரு விடயமாக முன்வைக்க வேண்டியதில்லை. ஏனெனில், அதற்காகத்தான் அவரை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஜனநாயக அடிப்படைகளை உறுதி செய்வதுதான் அவரது கடமை. மாறாக, நான், ஜனநாயகத்தின் கதவுகளை திறந்துவிட்டிருக்கின்றேன். அதனால், “நீங்கள் எனக்கு எதிராக போராட முடியாது” என்றோ, “விமர்சனங்களை முன்வைக்க முடியாது” என்றோ கூறிக்கொண்டு பின்வாங்குவது ஒருவகையில், ஜனநாயகத்துக்கு எதிரான நிலைப்பாடு. கிட்டத்தட்ட அதுவும் ஒருவகையில் மக்களை மறைமுகமாக அச்சுறுத்தும் செயற்பாடாகும்.

அதன்போக்கிலேயே, கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேசும் போது மைத்திரிபால சிறிசேன கூறிய, “என்னை பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்களுக்குத்தான் பலம் கூடும்“ என்கிற வாசகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. ராஜபக்ஷக்களை காட்டி தமிழ் மக்களை நோக்கிய மறைமுக அச்சுறுத்தலை அவர் விடுக்க நினைக்கின்றார். ராஜபக்ஷக்கள் காலத்தில் நீண்ட பிரச்சினைகளுக்கான தீர்வு மைத்திரிபால சிறிசேனவின் காலத்திலாவது ஓரளவு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில்தான் தமிழ் மக்கள், அவருக்கு வாக்களித்திருக்கின்றார்கள். ஆனால், சிறிய ஜனநாயக வெளியை காட்டிக்கொண்டு பாரிய பிரச்சினைகள் தொடர்பில் எந்தவித கரிசனையும் கொள்ளாமல், ராஜபக்ஷக்களின் வழியிலேயே மைத்திரிபால சிறிசேனவும் பயணிக்கும் போது, தமிழ் மக்கள் அதற்கு எதிராக எழுவது இயல்பானது. அதற்காக, போகிற இடங்களில் எல்லாம் மூக்குச் சிந்திக் கொண்டு, மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அவர் நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

யாழ். இந்துக் கல்லூரி நிகழ்வுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையில் பேசிய ஜனாதிபதி, “தமிழ் மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லை“ என்கிற தொனியில் பேசியிருக்கின்றார். அதாவது, வாகனத்திலிருந்து இறங்கி வந்து கறுப்புக்கொடி ஏந்திப் போராடியவர்களிடம் மைத்திரிபால சிறிசேன பேசியதும், போராட்டக்காரர்கள் புன்னகை பூத்த முகங்களோடு பேசியிருக்க வேண்டும். அவரை, அன்பாக வரவேற்றிருக்க வேண்டும். அவர் சொல்வதையேல்லாம் கேட்டு, அவர் அழைப்புக்கு இணங்கியிருக்க வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேன நினைத்திருக்கின்றார்.

போராட்டக்காரர்களை நேரடியாகச் சந்திப்பது என்று கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்ச்சி நிரல் வரையப்பட்டதும், மைத்திரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருந்திருக்கின்றது. போராட்டங்களை நேரடியாகச் சந்திக்கும் திறன் தன்னிடம் உண்டு, அதன்மூலம் பெரும் கதாநாயகத்தன்மையை தமிழ் மக்கள் மத்தியிலும், தென்னிலங்கையிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பியிருக்கின்றார்.

தமிழ் மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்தான். அதேநேரம், போராட்டக்குணத்திலும் முதன்மையானவர்கள். அவர்களிடம் விருந்தோம்பலை எதிர்பார்க்கும் நபர்கள், அவர்களின் உண்மையான கோரிக்கைகளையும், பிரச்சினைகளின் தன்மைகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்கள் தவறவிடப்படும் போதுதான், தமிழ் மக்கள் தங்களது விருந்தோம்பல் மனநிலையை இரண்டாம் பட்சமாக்கி, போராட்டக் குணத்தினை முதன்மைப்படுத்த வேண்டி வருகின்றது.

தன்னையோரு சமாதானத்தின் தேவதையாக, இலங்கையின் மீட்பராக மைத்திரிபால சிறிசேன கருதிக் கொள்வது அவரது உரிமை. ஆனால், அவர் நினைப்பதை மற்றவர்களும் மனதார உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், அதற்காக அவர் நிறையவே உழைக்க வேண்டும். புன்னகைகள் அழகானவைதான், ஆனால், உயிர் வலியில் மக்கள் துடித்துக்கொண்டிருக்கும் போது, அவர்களை நோக்கி புன்னகைப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. மாறாக, மக்களை அந்த உயிர் வலியிலிருந்து மீட்டெடுக்கும் போதுதான், அவர் உண்மையான மீட்பராகவும் தேவதையாகவும் மற்றவர்களினால் உணரப்படுவார்.

இராணுவம் உள்ளிட்ட முப்படையும் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளில் இன்னமும் 32 வீதமானவை விடுவிக்கப்படவில்லை. இறுதி மோதலின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை? இன்னமும் தமிழ் அரசியல் கைதிகளில், 70க்கும் அதிகமானவர்கள் வழக்கு- விசாரணைகளின் குழறுபடிகளினால் பல்லாண்டுகளாக சிறைகளில் கிடக்க வேண்டியிருக்கி்ன்றது, காணி அபகரிப்பும் பௌத்த திணிப்பும் வடக்கு- கிழக்கை திண்டாட வைக்கின்றது. இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பிலேயே தீர்வு காண்பதிலிருந்து பெருமளவு தவறியிருக்கின்ற மைத்திரிபால சிறிசேனவை, அவர் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடையப் போகின்ற இன்றைய நிலையிலும், புன்னகையோடு விருந்தோம்ப வேண்டும் என்பது என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அது, சிறுபிள்ளைத்தனமானது. அது, எரிச்சலூட்டுவது.

தமிழ்மிரர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer