காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் வனப் பரம்பலைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் விசேட அவதானத்துடன் செயற்படுவதுடன், அதற்கான அனைத்து செயற்பாடுகளும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “சுற்றாடல் பாதுகாப்பிற்கான பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட ஏனைய சர்வதேச பிரகடனங்களை உரியவாறு பின்பற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் தேசிய ரீதியில் அதற்கான செயற்திட்டங்கள் பலவும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக உலக நாடுகளுக்கு நிதியுதவிகளை வழங்கும்போது தமது நாட்டில் வனங்களின் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் சூழலை பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நாடுகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பினை வழங்குவதற்கான நடைமுறையொன்றினை சர்வதேச ரீதியில் செயற்படுத்த வேண்டியது அவசியமானது. இதனூடாக சுற்றாடலை பாதுகாப்பதற்கு நாடுகள் அதிக அக்கறையுடன் செயற்பட முடியும்.” என்றுள்ளார்.
Wednesday, October 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment