“அதிகாரத்தைப் பகிரவும் வேண்டாம், நாட்டைப் பிரிக்கவும் வேண்டாம். புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது மக்களினால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.” என்று பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய உரிமைகளுக்கான அமைப்பால் நேற்று வெள்ளிக்கிழமை இராஜகிரியவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பெங்கமுவே நாலக தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "நாட்டு மக்களின் தேவைக்காகவே அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது. ஆனால், தற்போதைய அரசாங்கம், தமிழ் அரசியல்வாதிகளின் தேவைக்காகவே இயங்குகின்றது. தமிழ் மக்களுக்காகவும் செயற்படாமல், தமிழ் மக்கள் என்ற பேரில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தேவையை நிறைவேற்றவே இந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
பிரபாகரன் குண்டுவைத்து பெற முயற்சித்ததை தற்போதைய அரசாங்கம் சட்டபூர்வமாக வழங்க முயற்சிக்கின்றது. தனி இராஜ்ஜியம் வழங்கப்பட்டால் சட்டபூர்வமாக மீளப்பெறுவது மிகக் கடினமான ஒன்றாகும்.
இது குறித்து அரச தரப்புக்கு நாம் கூறுகின்றபோது, "நாங்கள் நாட்டைப் பிரிக்கவில்லை. அதிகாரத்தைத்தான் பகிரப்போகின்றோம்'' என்கிறார்கள். அதிகாரத்தைப் பகிர்வதும் நாட்டைப் பிரிப்பதும் வேறல்ல. இரண்டும் ஒரே விடயங்கள்தான். அதனால் நாட்டையும் பிரிக்க வேண்டாம்; அதிகாரத்தையும் பகிரவேண்டாம்.
மாறாக, மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யுங்கள். அதனால் தமிழ் மக்கள் என்று வேறுபாடு காட்டத் தேவையில்லை. பரிபாலன செயற்பாடுகளை முறையாகச் செய்தால் போதுமானது என்பதையே நாங்கள் கூறுகின்றோம். அதிகாரத்தைப் பகிரவேண்டும் என்ற அவசியம் கிடையாது.
சிங்கள மக்கள் இந்த நாட்டில் மாத்திரம்தான் இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் மாத்திரம் 7 கோடி பேர் உள்ளனர். முழு உலக நாடுகளிலும் பெரும் தொகையில் தமிழர்கள் உள்ளனர். அதனால் தமிழ் ஈழத்திற்காக உலகளவில் ஒரு பெரும் வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரையில் இலங்கையிலிருந்த அரசுகள் பலவீனமாக இருந்தமையே இதற்குப் பிரதான காரணமாகும். அதனால் தமிழ் மக்கள் சார்பில் பேசுவதற்கு உலகளவில் மிகப்பெரிய குழுவொன்று இயங்கி வருகின்றது. இதற்கு எமது நாட்டு அரசாங்கமானது தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுகொள்வதற்காக தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றது.
அவ்வாறான பின்புலத்திலேயே புதிய அரசியலமைப்பையும் அமுல்படுத்தி 13வது திருத்தத்தையும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் புதிய அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்கும் அனைவரும் தேசத் துரோகிகளே. அவ்வாறு வாக்களித்துவிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களால் பெரும் அச்சுறுத்தல் இருக்கும் என்பதையும்தான் நினைவுபடுத்துகின்றேன்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் செல்ல முடியாது: பெங்கமுவே நாலக தேரர்
Saturday, October 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment