Saturday, October 28, 2017

சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிக்கை போர் நடத்தி வந்த கமல்ஹாசன் இன்று எண்ணூர் துறைமுக பகுதியில் களத்தில் இறங்கி உள்ளார்.

கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் இன்று துறைமுக கழிமுக பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சியாளர்களின் தவறுகளை கடுமையாக சுட்டிக்காட்டி வந்த கமல்ஹாசன், அரசியலில் களமிறங்கப் போவதாக கூறிவந்த கமல்ஹாசன், தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்க பதிவில், கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரியி ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும் வட சென்னை மின் நிலையமும், தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கொசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். நில வியாபாரிகளுக்கு கொடுக்கும் முனனுரிமையையும், உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றை புறக்கணிக்கும். உதவாக்கரைகள்தான் என வடசென்னைக்கு வரக்கூடிய ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விளக்கியிருந்தார்.

மேலும் ‘தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு என எண்ணூர் பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த பகுதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்டார் கமல்ஹாசன். எண்ணூர் துறைமுக கழிவுமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கமல், அப்பகுதி மக்களை சந்தித்தும் பேசி வருகிறார். அப்போது, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

மக்கள் பிரச்சினைகளுக்காக சமூக வலைத்தளமான டுவிட்டரில் மட்டுமே இதுவரை தனது கருத்துக்களை பதிவிட்டு வந்த கமல்ஹாசன், இன்று முதல் முறையாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்துள்ளது அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer