Saturday, October 28, 2017

மெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தள்ளுபடி செய்தது. மெர்சல் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப்பெறக் கோரிய வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மெர்சல் திரைப்படத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அஸ்வத்தாமன், மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சிப்பதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் பணம் இல்லை என நகைச்சுவை நடிகர் பேசுவதாகவும் கூறினார். மேலும், மருத்துவம் குறித்து தவறான தகவல்கள் மெர்சல் படத்தில் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பணமதிப்பிழப்பை விமர்சித்த எதிர்கட்சி தலைவர், அரசியல் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டதா ? எனவும் கேள்வி எழுப்பினர். பொதுநலனில் அக்கறை இருந்தால் குடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை கோரலாமே என வினவிய நீதிபதிகள், மெர்சல் வெறும் திரைப்படம் மட்டுமே நிஜ வாழ்க்கை இல்லையே எனவும் அறிவுறுத்தினர்.

மெர்சல் திரைப்படம் சொல்லும் அளவுக்கு நல்ல படம் இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளால் அப்படம் வெற்றிகரமாக ஓடுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மெர்சல் படத்திற்கு எதிரான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer