‘ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தை, மறு தணிக்கை செய்ய வேண்டாம்’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு இடையூறுகளை கடந்து தீபாவளியன்று தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜி.எஸ்.டி. போன்றவற்றுக்கு எதிரான வசனங்கள் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
இதற்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட மெர்சல் திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். விமர்சனங்களை கருத்தியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் விமர்சிப்பவர்களை அடக்க நினைக்காதீர்கள் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். கருத்து சுதந்திரத்தால் தான் இந்தியா ஒளிரும் என்றும் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Saturday, October 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment