அநுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தங்கள் மீதான வழக்குகள், மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதன் பின்னரே தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் உண்ணாவிரதமிருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளும் உறுதியாகவுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் மூன்று அரசியல் கைதிகளை வடக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு நேற்றுப் புதன்கிழமை காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளது.
இந்தக் குழுவில் சிவாஜிலிங்கத்துடன் உண்ணாவிரதமிருந்து வரும் திருவருளின் மனைவி, அவரது மகன், சுலக்சனுடைய தங்கை, தர்சனுடைய தாயார் மற்றும் ரெலோ அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம், சட்டத்தரணி ஆகிய எட்டுப் பேர் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த சந்திப்புத் தொடர்பாக எம்.கே. சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
“மூன்று அரசியல் கைதிகளும் செவ்வாய்க்கிழமை அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதியக்கப்பட்டுச் சிகிச்சையும் வழங்கப்பட்டிருந்தது. வைத்தியசாலையில் கட்டில்களில் சங்கிலி பிணைக்கப்பட்டே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த மூன்று அரசியல் கைதிகளும் நேற்று புதன்கிழமை சிறைச்சாலை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு மீளவும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை அத்தியட்சகருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையிலேயே கைதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கான விசேட அனுமதி எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. நானும், அரசியல் கைதிகளின் உறவினர்களும் மிக அருகிலிருந்து அவர்களது உடல் நிலை தொடர்பில் தெரிந்து கொண்டதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.
அநுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தங்கள் வழக்குகள் மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதன் பின்னரே தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் உண்ணாவிரதமிருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளும் உறுதியாகவுள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்த பின்னர் தான் உங்கள் போராட்டத்தை நிறைவிற்குக் கொண்டு வர வேண்டுமென நாங்களும் அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம்.” என்றுள்ளார்.
Thursday, October 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment