இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 54 தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட 140 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பாக்குநீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.
கடந்த 26ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரு எந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதுவரை இந்த ஆண்டில் 317 மீனவர்கள் மற்றும் 62 மீன்பிடி படகுகள், 59 சம்பவங்களில் பிடிக்கப்பட்டனர். மத்திய மற்றும் தமிழக அரசின் தொடர் வற்புறுத்தலுக்கு பின்னர் 263 பேர் விடுவிக்கப்பட்டனர்.
மீனவர்களை அவ்வப்போது விடுவித்தாலும், அவர்களின் வாழ்வாதார உபகரணமாக இருக்கும் மீன்பிடி படகுகளை தொடர்ந்து இலங்கை அரசு கைப்பற்றி வைத்துக்கொள்கிறது.
2015ஆம் ஆண்டில் பிடிக்கப்பட்ட 61 படகுகள் அனைத்தையும் விடுவிப்பதற்குப் பதிலாக 36 படகுகளை மட்டுமே இலங்கை கடற்படை விடுவித்துள்ளது. சமீபத்தில் நடந்த சம்பவங்களில் பிடிக்கப்பட்ட படகுகளையும் சேர்த்து தற்போது இலங்கையில் 140 மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. இது மீனவர்கள் மத்தியில் அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று பலமுறை தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. எனவே சர்வதேச கடல் எல்லைப் பிரச்சினை என்பது முடியாததாகவே உள்ளது. பாக்கு நீரிணைப் பகுதியில் டிராலர்களை வைத்து மீன்பிடிக்கும் முறையை மாற்றி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறிக்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை மறு படியும் உறுதிப்படுத்துகிறேன்.
எனவே நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, பாக்கு நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேசி, அவர்கள் அடிக்கடி கடத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 54 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட 140 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளது.
Home
»
Tamizhagam
»
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மோடிக்கு, பழனிசாமி கடிதம்!
Saturday, October 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment