Tuesday, October 31, 2017

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான சுதந்திரங்களை அங்கீகரிக்கும் இன்னொரு படியாக அங்கு அடுத்த வருடம் 2018 ஆரம்பம் முதல் பெண்களை எந்தவொரு விளையாட்டுப் போட்டிக்கும் பார்வையாளர்களாக அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

இது குறித்து சவுதியின் பொது விளையாட்டு அமைப்பு வெளியிட்ட தகவலில் முதற்கட்டமாக சவுதியிலுள்ள முக்கிய நகரங்களான ஜெத்தாஹ், டம்மாம் மற்றும் ரியாத் போன்றவற்றில் உள்ள 3 பிரதான மைதானங்களில் 2018 முதல் குடும்ப சகிதமாக பெண்களும் உடன் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளை ரசிக்க முடியும் எனவும் இதற்கான சட்டம் அமுலாக இருப்பதாகவும் ஞாயிறு மாலை தெரிவிக்கப் பட்டுள்ளது. மன்னராட்சி நிலவி வரும் சவுதியில் பல காலமாகப் பெண்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் அண்மைக் காலமாக அங்கு 'விஷன் 2030' என்ற திட்டம் உருவாக்கப் பட்டு பெண்கள் உரிமை, பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள சவுதி அரசு முனைப்பாக செயற்பட்டு வருகின்றது.

ஜூலையில் அங்கு பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப் பட்டிருந்தது. மேலும் எதிர்வரும் வருடம் ஜூன் மாதம் முதல் சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப் படுகின்றனர் என்று நவம்பரில் அரசு உத்தரவு அளித்திருந்தது. இந்த உத்தரவுக்கு உலகளாவிய ரீதியில் பெண்  உரிமை அமைப்புக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்ததுடன் உலகில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் அனுமதி கிடைக்காத ஒரே நாடு சவுதி என்ற அவப்பெயரும் நீங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer