Friday, September 1, 2017

அரியலூர் அருகே மருத்துவ கனவோடு இருந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்பதைக் காட்டிலும், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செய்த கொலை என்றே கருத வேண்டும் என குன்னம் முன்னாள் எம்எல்ஏவும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான சிவசங்கர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அனிதா மரணம் தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர் கூறியது,

நீட் தேர்வு இந்த ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்படும் என்று மத்திய அரசில் உள்ள நிர்மலா சீதாராமனும், மாநில அரசில் உள்ள அமைச்சர்களும், முதல் அமைச்சரும் சொன்னதை நம்பிதான் மாணவி அனிதா எப்படியும் நமக்கு மருத்துவ சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு சிபிஎஸ்சி மாணவர்கள் வழக்காடபோன போது, தன்னையும் எதிர்மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படி அனிதா சென்றார். ஆனால் திடீரென்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தமிழக அரசு போட்ட அவசர சட்டத்தை ஏற்கவில்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மத்திய அரசு ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீட் தேர்வுப்படிதான் மருத்துவ சேர்க்கை என்று சொன்னதால்தான் அனிதாவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு சாதாரண சிறு கிராமம். தாய் இல்லாத பிள்ளை. அப்பா கூலி வேலை செய்பவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கஷ்டப்பட்டு படித்து, 12 வருட படிப்புக்கு மதிப்பில்லாமல் போனதால் அனிதா தற்கொலை முடிவுக்குச் சென்றுள்ளார். மோடி அரசும், எடப்பாடி அரசும்தான் அனிதா மரணத்திற்கு முழு காரணம்.

நீட் தேர்வை கண்டித்து அரியலூரில் திமுக நடத்திய
போராட்டத்தில் அனிதா கலந்து கொண்டபோது எடுத்தப்படம்

மற்ற மாணவர்கள் அனிதா போன்ற முடிவை எடுக்கக் கூடாது. இது வாழ்க்கை பிரச்சனை. இந்த ஆண்டு இல்லையென்றால், அடுத்த ஆண்டு, அதற்கு அடுத்த ஆண்டில் சேர்ந்துகொள்ளலாம். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் உயிர் போனால் வராது.

தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer