விடியாத இரவென்று எதுவுமே இல்லையே
விழிநீரைச் சிந்தலாமா?
வெற்றியைத் தேடாமல் தோல்வியைக் கண்டுநாம்
விரக்தியில் வாடலாமா?
முடியாத ஒன்றென இங்கொன்றும் இல்லையே
திகைத்துநாம் நிற்கலாமா?
மூர்க்கமாய்ப் போராடிப் பார்க்காமல் மனம்நொந்து
முடங்கியே சரியலாமா?
அடிவேரைப் பறிப்போரை வெடிவைத்து வீழ்த்தாமல்
வள்ளலார் ஆகலாமா?
அதிகாரத் திருடர்களின் அலங்கார பவனிகளை
வேடிக்கை பார்க்கலாமா?
கடிவாளக் கட்டுகளைப் பிய்த்தெறிந்து வீசாமல்
கண்ணீரைச் சிந்தலாமா?
கனவுகளை மீட்காமல் மனம்நொந்து போனபடி
விட்டத்தில் தொங்கலாமா?
அதிகார நரிகளின் ஆதிக்கத் திமிரினை
உடனாக அடக்கவேண்டும்!
அடிவருடிக் கூட்டமா தமிழகம் ஆள்வது?
எழுச்சியால் துரத்தவேண்டும்.
மிதிக்கின்ற கால்களை ஒடிக்கின்ற வல்லமை
நம்மிடம் உண்டு தோழா...
வீறுமிகும் தமிழரை வீழ்த்துவோர் யாரென
ஊதலாம் சங்கு தோழா.
புதியதோர் வரலாறு புலரவே எல்லோரும்
கைகோத்து நிற்கவேண்டும்.
பூமிக்குச் சுமையாக வாழ்வதால் பயனில்லை
போராடிப் பார்க்கவேண்டும்.
சதிகளை உடைக்கலாம்; சமரிட்டுப் பார்க்கலாம்;
சகுனிகளைத் துரத்தலாம் வா!
சாய்க்கவரும் பகைவரை வேரோடு சாய்க்கலாம்
வரலாற்றை மாற்றலாம் வா!
Tuesday, September 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment