Tuesday, September 26, 2017

தீவிரவாதிகள் உள்நுழைவதைத் தடுப்பது மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு என்ற போர்வையில் கடந்த சில மாதங்களாக சிரியா, ஈரான், சோமாலியா, யேமென், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து பொது  மக்கள் அமெரிக்காவுக்கு நுழைய விசா தடை உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்திருந்தார். தற்போது வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளால் கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் வடகொரியா, வெனிசுலா மற்றும் சாத் ஆகிய நாடுகள் இணைக்கப் பட்டுள்ளன.

டிரம்பின் முன்னைய முடிவை அமெரிக்க மக்கள் சிலர் எதிர்த்து இது மத ரீதியான ஒடுக்கு முறை என நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். ஆனால் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் சில நிபந்தனைகளுடன் இந்த உத்தரவை அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிபந்தனைகளில் அடிப்படையில் நெருக்கமான உறவினர்களைப் பார்வையிடல், வணிக மற்றும் கல்வி நோக்கங்கள் என்பன அனுமதிக்கப் பட்டன. மேலும் தடைப் பட்டியலில் இருந்து சூடான், ஈராக் ஆகிய நாடுகள் விலக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  தற்போது அதே பாதுகாப்புக் காரணம் கருதி வடகொரியா, வெனிசுலா, மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாத் ஆகிய 3 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் பொது மக்கள் நுழைய விசா தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆயினும் இந்நாடுகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.  வடகொரியா மீதான தடை எதிர்பார்க்கப் பட்ட ஒன்று தான் என்ற போதும் அமெரிக்காவின் சிவில் யூனியன் உரிமைகள் அமைப்பு இந்த புதிய தடை உத்தரவுக்கும் கண்டனம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer