Friday, September 1, 2017

விவேகம் படத்தில் அஜித்தின் புகழை சத்தமாக பேசிய இயக்குனர் சிவா, சுவாரசியமான, முக்கியமான இந்த விஷயங்களை சத்தமில்லாமல், தொட்டுச் சென்று விட்டார்.    

தற்கால உலக அரசியல்

சர்வதேச தீவிரவாத ஒழிப்புப் படையில் இருக்கும் நேர்மையான அதிகாரியான  அஜித், தன் குழுவில் பணியாற்றும் தன்  நண்பர்களே துரோகம் செய்ததை உணர்ந்த பின் வரும் காட்சியில்,  "யாருடா நீங்க எல்லாம் ?" என்று வில்லன் விவேக் ஓபராயிடம் கேட்கும்  பொழுது, "நாங்க தான் சீக்ரட் சொசைட்டி.  இந்த உலகத்தை ஆள்வது அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் மட்டுமில்லை, நிழல் அரசாங்கமும் சீக்ரட் சொசைட்டியும் தான்" என்று விவேக் ஓபராய் கூறுவார். மேலும், "இந்த உலகத்துல பல யுத்தங்களைத் தொடங்குவதும், நடத்துவதும், அதனால லாபம் இல்லையென்றால் முடித்து வைப்பதும் சீக்ரட் சொசைட்டிகள் தான்" என்று கூறுகிறார். "மனுஷங்க எப்படி குரங்குல இருந்து  எவல்யூஷன்ல வந்தாங்களோ, அது மாதிரி கடவுளும் எவல்யூஷன்ல மாறியிருக்கார். பணமா இருக்கார். இப்போ பணம் தான் கடவுள்", என்றும் ஒரு வசனம் இருக்கிறது.  பழைய விஜயகாந்த், அர்ஜுன் படங்களில் வரும் தீவிரவாதிகளின் வசனங்கள் போல அல்ல இந்த வசனங்கள். சற்று கவனித்துப் பார்த்தால் பெரிய அர்த்தங்களை உடையது.

'சீக்ரட் சொசைட்டி'

                                             இல்லுமினாட்டி முத்திரை

'சீக்ரட் சொசைட்டி' என்று 'விவேகம்' படத்தின் ஆர்யான் கதாபாத்திரம் குறிப்பிடுவது, உலகெங்கிலும் நேரடியாக அதிகாரத்தில் இல்லாமல், மக்களுக்குத் தெரியாமல், மக்களின் வாழ்க்கை முறையையும், அரசாங்கங்களையும் போர்களையும் தீர்மானிப்பவர்களாக சொல்லப்படும் சில குடும்பங்களாலான   ரகசிய சமுதாயத்தைத் தான். இவர்கள் இருப்பதற்கும், இவர்களின் செயல்பாடுகள் என்று சொல்லப்படுபவை உண்மையில் நடக்கிறதா என்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை. எல்லாமே செவி வழியாகவும், சில புத்தகங்களின் வழியாகவும், இன்று இணையத்தின் வழியாகவும் பரவி வரும் கதைகளே. உலகை உலுக்கிய பல சம்பவங்களை வேறு சில சம்பவங்களுடன் முடிச்சுப் போட்டு, பொதுவாக நம்பப்படும் காரணங்களை எல்லாம் மறுத்து, அந்த சம்பவங்களை நடத்தியதே இந்த சீக்ரட் சொசைட்டி தான் என்று கூறுகின்றனர் பலர். இந்தக் கதைகள் 'கான்ஸ்பிரஸி தியரி' (Conspiracy - சதி) என்று சொல்லப்படுகின்றன. வெளிநாட்டில் பல ஆண்டுகளாகவும், சமீப காலமாக தமிழ்நாட்டிலும் கூட இவற்றைப் பற்றிய வீடியோக்களை பலர் வெளியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் குறிப்பாக பேசுவது 'இல்லுமினாட்டி'கள் (Illuminati) பற்றித்தான்.

யார் இந்த இல்லுமினாட்டிகள்?

1972இல் ரோத்ஸ்ச்சைல்டு குடும்பத்தால் நடத்தப்பட்ட  இல்லுமினாட்டிகள் விருந்தில் எடுக்கப்பட்டதாக  சொல்லப்படும் படம்.

இல்லுமினாட்டிகளைப் பற்றி சொல்லப்படும் பல்வேறு கோட்பாடுகள், கதைகளை ஆராய்ந்தால் கிடைக்கும் சுருக்கம் இதுதான். 1776ஆம் வருடம் ஆடம் வைஷாப்ட் என்பவரால் 'பவாரியன் இல்லுமினாட்டி' என்ற ரகசியக் குழு தொடங்கப்பட்டது. 'இல்லுமினாட்டி' என்ற வார்த்தை  'ஒளியூட்டு' என்று பொருள்படும் 'இல்லுமினேட்' (illuminate) என்ற  ஆங்கில வார்த்தையிலிருந்து வந்தது. இவர்கள் தங்களை உலகுக்கு ஒளியூட்டுபவர்களாகக் கருதினார்கள், நம்பினார்கள். ஏற்கனவே, 1717 ஆம் ஆண்டு வாக்கில் 'ஃப்ரீ மேசன்ஸ்' (Freemasons) என்ற இதே போன்ற 'சீக்ரட் சொசைட்டி' தொடங்கப்பட்டு இயங்கி வந்தது. ஜேக்கப் ஆஸ்டர் என்ற ஜெர்மனியை சேர்ந்த யூதர், 1784 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு வந்து ஓரிரு வருடங்களிலேயே தன் திறமையாலும், தொழில் தந்திரத்தாலும் பெரும்புள்ளியாகி, 'ஃப்ரீ மேசன்ஸ்'  குழுவில் இணைந்து, பின் அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தததாகவும், காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்து, இறுதியில் தொழிலிலும் அதிகாரத்திலும் உச்சத்தில் இருந்த பதிமூன்று குடும்பங்கள் மட்டும்  அந்த ரகசிய குழுவில் அங்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதியில் யூத வேர்கள் உடையவர்களாகக் கூறப்படும் இந்த இல்லுமினாட்டிகள், சாத்தானை வழிபடுபவர்கள் என்றும், கிருத்துவத்தையும் பிற மதங்களுக்கும் எதிரானவர்கள் இவர்கள் என்றும் கூறப்படுகிறது. உலகின் அத்தனை தொழில்களையும், அரசாங்கங்களையும், போர்களையும், தீவிரவாதத்தையும் இவர்கள் தான் கட்டுப்படுத்திகிறார்கள் என்றும் கூறுகிறார்கள் இந்த கான்ஸ்பிரஸி தியரிஸ்ட்டுகள்.

எல்லாம் அவன் செயல்?

உலகின் வங்கிகள், தங்கம், எண்ணெய்-எரிபொருள், ரியல் எஸ்டேட் எனப்படும் நிலம், போதைப் பொருள், ஆயுத வியாபாரம், பொழுதுபோக்கு வியாபாரம் என அனைத்து முக்கிய தொழில்களும், நிறுவனங்களும் இந்த பதிமூன்று குடும்பங்களிடம் தான் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆஸ்டர், காலின்ஸ், டூபாண்ட், ஃப்ரீமேன், கென்னடி, லீ, ஒனாசிஸ், ராக்ஃபெல்லர், ரோத்ஸ்சைல்டு, ரஸ்ஸல், வேன்டைன், மேரோவிஞ்சியன், டிஸ்னீ ஆகிய பதிமூன்று குடும்பங்கள் இந்த இல்லுமினாட்டி சீக்ரட் சொசைட்டியின் முக்கிய  அங்கமாகவும், இவர்களுடன் மெக்டொனால்ட்ஸ் மற்றும் ரெனால்ட் குடும்பங்கள் பின்னர் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மை யூதர்களாகவும் சிலர் பிற வேர்கள் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.   இவர்களுக்கென தனி வழிபாடு, தனி வழக்கங்கள், தனி சந்திப்பிடம் இருக்கிறதாம். சிலர், அது 'டிஸ்னீ லேண்ட்'டில் பாதாள மாளிகையாய் இருப்பதாகவும், சிலர் அது அந்தமான் தீவுகள் அருகில் யாருக்கும் தெரியாத தீவுகளில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.  அவர்கள் சொல்லுவது போல, பல மிகப்பெரிய நிறுவனங்கள், இந்தக் குடும்பங்களுக்கு சொந்தமாய் இருக்கின்றன.                    

போர்களை நடத்துவதும், நிறுத்துவதும்

                                      நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல்.

நெப்போலியனுக்குப்  பணம் கொடுத்து போர்களில் வெல்ல வைத்ததும், பின் தேவையில்லை என்ற போது வாட்டர்லூ போரில் தோற்க வைத்ததும், இரண்டாம் உலகப் போரை உண்டாக்கியதும், முடிவுக்குக் கொண்டு வந்ததும், என்று ஆரம்பித்து ஜப்பான் அணு ஆயுதத் தாக்குதல், மலேசிய விமானம் கடத்தப்பட்டது, ஃபுகுஷிமா அணு உலை விபத்து,  நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் என நாமறிந்த அனைத்து தாக்குதல்களுக்கும் சூத்திரதாரி இவர்கள் தான் என்று கூறுபவர்கள், அதை உறுதிப்படுத்த கூறும் விளக்கங்களும் உதாரணங்களும் ஆதாரங்களும் ஏற்கனவே பல பிரச்சனைகளில் தலை சுற்றிப்போய் இருக்கும் நம்மை மயக்கமடைய செய்கின்றன. உச்ச கட்டமாக, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியும் 'இல்லுமினாட்டி' குடும்பத்தை சேர்ந்தவரென்றும், ஒரு கூட்டத்தில் அவர் 'சீக்ரட் சொசைட்டிகள்' பற்றி பேசியதாலேயே அவர்  'இல்லுமினாட்டிகளாலேயே கொல்லப்பட்டார் என்றும் கூறுகிறார்கள்.   'சதுரங்க வேட்டை' படத்தில் வரும் புகழ் பெற்ற வசனம், "நாம சொல்ற பொய்ல உண்மையும் கலந்து இருக்கனும்" என்பது. அதற்கேற்ப, இவர்கள் கூறும் அத்தனை கதைகளிலும் உண்மைகள் கலந்தே இருக்கின்றன. 'விவேகம்' படத்தில் இந்த வசனம், முழுக்க கற்பனை என்று ஒதுக்க முடியாதது.

செயற்கை நிலநடுக்கம் (Man-made Earthquake)

                                                                          X 37B

'விவேகம்' திரைப்படத்தில் வரும் இன்னொரு விஷயம் இந்த    செயற்கை நிலநடுக்கம். நிலநடுக்கம் வர வாய்ப்பே இல்லாத நிலப்பரப்புகளிலும் நாடுகளிலும் கூட மனிதர்களாலேயே நிலநடுக்கம் ஏற்படுத்த முடியும் என்றும் அந்த தொழிநுட்பத்தை, எதிரிகளாகக் கருதும் நாடுகளை அழிக்க பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே அமெரிக்கா செயற்கையாக 'இயற்கை' சீற்றங்களை  உண்டாக்குவது  சார்ந்த 'ஹார்ப்' (HAARP) தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருவதாகவும் அந்த ஆராய்ச்சி நடக்கும் இடத்தில் யாரையும் அனுமதிக்காமல் மிகுந்த பாதுகாப்புடன்  ரகசியம் காக்கப்படுவதாகவும் சில  பத்திரிகையாளர்கள்  கூறியுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, அமெரிக்கா  தனது விண்வெளி விமானமான X 37B யை ஒவ்வொரு முறை விண்ணுக்கு அனுப்பிய பின்னும் ஏதாவதொரு இசுலாமிய நாட்டில்  இயற்கை அழிவு நடப்பதாகவும், எனவே இந்த விண்வெளி விமானம் எதிரிகளை தாக்க  அமெரிக்காவின் அதிநவீன ஆயுதம் என்றெல்லாம்  பேசுகிறார்கள் சில  கான்ஸ்பிரஸி தியரிஸ்ட்டுகள். அமெரிக்கா இந்தக் கூற்றுகளையெல்லாம் பல தருணங்களில் மறுத்து வந்தாலும், அது ஒன்றும் 'சொல்வதெல்லாம் உண்மை' அல்ல.

சந்தேகத்திற்குரிய ஆய்வு நடத்தப்படுவதாக சொல்லப்படும் ஏரியா 51

இந்தியாவில் இல்லுமினாட்டிகள்

'விவேகம்' படத்தில் இந்த சீக்ரட் சொசைட்டி செயற்கை நிலநடுக்கத்தை ஏற்படுத்த முயல்வது  டெல்லியில் தான். உண்மையில் நம் இந்திய  இல்லுமினாட்டி எக்ஸ்பர்ட்டுகள் என்ன சொல்கிறார்கள்? 'பசுமைப் புரட்சி' என்பதே இந்தியாவின் நிலவளத்தையும் சுயசார்பையும் ஒழித்து தங்கள் வியாபாரத்தைப்  பெருக்க   இல்லுமினாட்டிகள் செய்த சதி என்றும்,  தொன்னூறுகளின் இறுதியில்   ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, யுக்தா முகி என தொடர்ந்து  இந்திய  பெண்களை உலக அழகிகளாகத் தேர்ந்தெடுத்து, மக்களுக்கு புற  அழகின் மீது மயக்கத்தை உண்டாக்கி சோப்புகள், க்ரீம்கள் என தங்கள் அழகுப் பொருள்களுக்கு இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக்கினர் என்றும் கூறுகிறார்கள். இப்பொழுது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி வரை இதையெல்லாம் செய்வது இல்லுமினாட்டிகள் என்று கூறுகிறார்கள்.

                                                          ஐஸ்வர்யா ராய்

வியாபாரத்துக்காக மக்கள் மனதில், கலாச்சாரத்தில், ரசனையில் மாற்றத்தை  உண்டாக்க நீண்ட கால திட்டங்கள் தீட்டுவது, அரசியல்வாதிகளையும் அரசுகளையும் பணத்தால் கட்டுப்படுத்துவது,   அதற்காக மிகப்பெரிய முதலீடுகளைச் செய்வதெல்லாம் உண்மை தான் என்றாலும், உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் இதை நிகழ்த்துவது இந்த சிறிய 'சீக்ரட் சொசைட்டி' என்பதும், இவர்கள் கண்ணசைவில் தான் உலகின் அத்தனை அரசுகளும் செயல்படுகின்றன என்பதும், எதையுமே மறைக்க முடியாத தகவல் தொழில்நுட்பமும், செய்தி தொலைக்காட்சிகளும் பெருகிவிட்ட இந்த காலத்தில், இவர்கள் ரகசியமாக இவ்வளவு பெரிய வேலைகளையும் செய்கிறார்கள் என்பதும் நம்பக் கடினமான கூற்றுகள்.

"உலக நாடுகளை ஆளுவது அந்தந்த நாடுகளின் அரசாங்கம் மட்டுமில்லை..." என்ற வசனமும் இருக்கிறது. என்னதான், தமிழ்நாட்டை ஆளுவது நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம் இல்லை என்றாலும், 'சீக்ரட் சொசைட்டிகள்' என்பதை முழுதாய் நம்ப முடியவில்லை.     இந்த இல்லுமினாட்டி, 'கான்ஸ்பிரஸி தியரி' ஆகியவற்றுக்கு எதிராக    நம்மிடம் ஆயிரம் தர்க்க ரீதியான கேள்விகள் இருக்கின்றன.  ஆனாலும் இந்தக் கதைகள், 'உண்மையாக இருக்குமோ' என்ற எண்ணத்தை உருவாக்கி உலகமெங்கும் உலவி வருவதற்கு, சொல்லப்படும் பொய்களில் கொஞ்சம் உண்மையும் கலந்து இருப்பதே காரணம். 'விவேகம்' வேகமாய் தொட்டுவிட்டு, சென்றுவிட்ட இந்த அரசியலை முழுதாகப்  புறக்கணிக்க முடியாது. இனிவரும் திரைப்படங்களில் இது இன்னும்  பேசப்படலாம். இனிவரும் காலங்களில், இவை உண்மை என தெரியவும் வரலாம். ஏனெனில், நாம் வரலாறு என்று இன்று  படிப்பவை என்றோ ஒரு நாள் தனி மனிதர்களால் எழுதப்பட்டவையே.

வசந்த் பாலகிருஷ்ணன்.
nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer