Wednesday, September 27, 2017

ஹைதராபாத் உளவுத்துறையில் சந்தேகத்திற்குரிய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு காவல்துறைக்கு உதவும் வேலையில் இருக்கும்  மகேஷ்பாபு, தன்னுடைய ஆத்ம திருப்திக்காக, தானே ஒரு மென்பொருளை உருவாக்கி, அதன் மூலம் பொது மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்து, ஆபத்துள்ளவர்களுக்கு முன்னரே சென்று உதவுகிறார். அப்படி ஒரு உரையாடலில், சிறிய ஆபத்து என்றெண்ணி, சாதாரணமாக கையாளும் ஒரு விஷயம், இரு பெண்களின் கொலையில் முடிய, அதை விசாரிக்கும் பொழுது தான் அது மிகப்பெரிய கொலைத் தொடரின் ஒரு பகுதியே என்று தெரியவருகிறது. கொலைகளுக்குப் பின்னே இருக்கும் சைக்கோ கொலைகாரன் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மகேஷ் பாபுவுக்கும் நடக்கும் எலி-பூனை  விளையாட்டு தான் 'ஸ்பைடர்'.

மகேஷ் பாபு, 'பிரின்ஸ்' என்று அழைக்கப்படுவதற்கு சரியான காரணம் இருக்கிறது. அவரது தோற்றமும், நடவடிக்கைகளும் எந்த விஷயத்தையும் அலட்டிக்கொள்ளாமல் அணுகும் விதமும் ஒரு இளவரசரைப் போலதான் இருக்கின்றது. தமிழுக்கு நேரடியாக அறிமுகமாக சரியான படத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.  ஆர்ப்பாட்டமில்லாத ஹீரோயிசம் தான் அவரது ஸ்டைல் என்றாலும், எந்த நிகழ்வுக்குமே அதிர்வைக் காட்டாமல் இருப்பது சில இடங்களில்  நெருடுகிறது. எஸ்.ஜே.சூர்யாவின் விஸ்வரூபம் இது. இடைவேளைக் காட்சியில், அவரது குரல், கண்கள், கன்னம் என அனைத்தும் நடித்திருக்கின்றன. அவரது சிறு வயது பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் மிரட்டியிருக்கிறான். ரகுல் ப்ரீத் சிங் தனக்கு வழங்கப்பட்ட இடத்தில் வந்து போகிறார். வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் தான் தெரியும் அவரது திறமை. பரத்தும் வந்தவுடன் சென்றுவிடுகிறார்.   ஆர்.ஜே.பாலாஜிக்கும் சிறிது நேரம் தான், ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஜெயபிரகாஷ், ஷாஜி,  ஹரீஷ் பெராடி ஆகியோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர்.  தெலுங்கு நடிகர்களுக்கும் தமிழ் நடிகர்களுக்கும் காட்சிகளை  பிரித்துக் கொடுக்கவேண்டிய கட்டாயம் போல இயக்குனருக்கு.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் வழக்கமான மூளை விளையாட்டுகள் தான் இந்தப் படத்திலும் ஸ்பெஷல். மகேஷ் பாபுவின் குடும்பத்துக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் காட்சி, வில்லன் இருக்கும் தெருவின் பெண்களைக் கொண்டே ஒரு ஆபரேஷனை நடத்தும் காட்சி ஆகியவை எடுத்துக்காட்டுகள். அடுத்தடுத்த கொலைகள், சுவாரசியமான விசாரணை, வில்லனின் அறிமுகம், மகேஷ் பாபு- எஸ்.ஜே.சூர்யா சந்திப்பு என முதல் பாதி பதைபதைப்பு, விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளையில்  அப்படி உச்சத்தில் கொண்டு நிறுத்தப்படும் படம், இரண்டாம் பாதியில் அங்கிருந்து அப்படியே சறுக்கியது போல உணர்வு. ஆனாலும் எஸ்.ஜே.சூர்யாவின் இருப்பும், சில காட்சிகளும் காப்பாற்றுகின்றன.

அத்தனை சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தில் ஆசுவாசமய் இல்லாமல் அனாவசியமாய் இருக்கின்றன பாடல்களும் காதலும். 'கஜினி', 'ஏழாம் அறிவு' படங்களில் நாயகிகளுக்கு இருந்த முக்கியத்துவம், 'துப்பாக்கி', 'கத்தி', 'ஸ்பைடர்' படங்களில் இல்லை. அதுவும் இதில், அந்த ஒரு காட்சியில் வரும் பெண்கள் அளவுக்குக் கூட ரகுலுக்கு நடிக்க வாய்ப்பில்லை. கதை அப்படிப்பட்டது என்றால், பின் எதற்கு அந்த காட்சிகள். தமிழ் ரசிகர்கள், இரண்டாம் பாதியில் குத்துப் பாட்டு வேண்டுமென்று கேட்பதை  நிறுத்தி வருடங்களாகிவிட்டது, நம்புங்கள் முருகதாஸ்! 'மொச்சைக்கொட்டை' பாடலெல்லாம் இன்னொரு இடைவேளையே. 'மிஸ் மிஸ்டீரியஸ், இவன் கன்ஃபூஷியஸ்' என மாடர்ன் வரிகளில்  விளையாடியிருக்கிறார் மதன் கார்க்கி. ஆனால், அது எதையும் ரசிக்கும் ஆர்வத்தைத் தூண்டவில்லை ஹாரிஸின் இசை. பின்னணி இசை, நன்றாக இருக்கிறது, ஆனால் பழசாகவே இருக்கிறது. அந்நியனில் ஒலித்ததே இன்னும் ஒலிக்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் சிறப்பு. முக்கியமான சண்டைக்காட்சிகளில் VFX  சற்று சொதப்பியிருக்கிறது. இறுதியில் திடீரென்று சொல்லப்படும் மனிதாபிமான மெசேஜ் அழுத்தமில்லை.

முதல் பாதி பரபரப்பு, விறுவிறுப்பு.. இரண்டாம் பாதி சலசலப்பு!

0 comments :

Post a Comment

 
Toggle Footer