புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை முற்போக்கானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இடைக்கால அறிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது இணக்கத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்துக்கான, வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கையானது, சகலரதும் இணக்கப்பாட்டோடும் கடந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படுவதற்காகத் தயார்ப்படுத்தப்பட்டது. அப்போதிருந்த சில அரசியல் சூழ்நிலைகளால் சமர்ப்பிக்கப்பட முடியாமல், சுமார் ஒன்பது மாதங்களின் பின்னர் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போதைய அரசியில் சூழ்நிலைகளால் அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட முடியாமற் போனாலும் பிரதான அறிக்கையின் உள்ளடக்கத்தை மாற்ற வழிநடத்தல் குழுவினர் அனுமதிக்கவில்லை, மாறாக பிரதான அறிக்கை தொடர்பில் கட்சிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியினதும் அவதானங்கள் பிரதான அறிக்கையுடன் இணைக்கப்பட்டுமுள்ளன.
முதலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் பல கட்சிகள் பின்னர் மாறுபாடான கருத்துக்களை முன்வைத்துமுள்ளன. அனேக கட்சிகள் தாம் முன்னர் இணங்கியவற்றில் இருந்த மாறுபட்டதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது கொள்கை சார்ந்த விடயங்களில் சில கரிசனைகளை முன்வைத்தது.
இரண்டு பிரதான கட்சிகளும் பிரதான அறிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் கூட்டமைப்பும் தனது இணக்கத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்கும் என நாங்கள் எங்கள் அவதானத்தில் கூறியிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியானது பிரதான அறிக்கையை ஏற்றுக்கொள்வதால் வேறெந்த அவதானத்தையும் மேற்கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தான் ஆரம்பத்தில் இணங்கியவற்றில் இருந்து மாறுபட்டமை இந்த இடைக்கால அறிக்கை வெளிவருவதில் தாமதத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
புதிய அரசியலமப்பு உருவக்கத்தில் பிரதான அறிக்கையே கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென்பது பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே, பிரதான அறிக்கை முன்னேற்றகரமானதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பார்க்கப்படுகின்றது. ஆனால் பிரதான அறிக்கைக்கு இணக்கம் தெரிவித்த கட்சிகள் பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதைப்போன்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அது நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரிசனைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.” என்றுள்ளார்.
Saturday, September 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment