Saturday, September 16, 2017

கருப்புக்கண்ணாடி மிஷ்கினின் ‘கலர் மாறாத’ ஹீரோ! அவன் முக்கால் சைக்கோவா? முழு சைக்கோவா? என்று விளங்கிக் கொள்ள முடியாத பிரசன்ட்டேஷன்.

தலையை குனிந்து கொண்டே சில பைட். இவையெல்லாம்தான் துப்பறிவாள-ர். (ஏன் தலைப்புல மட்டும் -ன்?) சீரியசான காட்சிகளில் கூட சின்னப்பிள்ளைகள் விழுந்து விழுந்து சிரிக்க.... ‘மிஷ்கின், நீங்க மாறணுமா? இல்ல நாங்க மாறணுமா?’ என்கிற சின்ன குழப்பத்தோடு இடத்தை காலி பண்ணுகிறோம்.

‘கணியன் பூங்குன்றன்- துப்பறிவாளர்’ என்கிற நேம் போர்டு சகிதம் ஒரு அரையிருட்டு வீட்டில் தங்கியிருக்கிறார்கள் விஷாலும், பிரசன்னாவும். இருவருமே துப்பறிவாளர்கள்தான். ஆனால் படத்தில் வருகிற டயலாக் மாதிரியே, ‘நீ பாக்குற. நான் தேடுறேன்’ டைப்பில், அரை மக்காக திரிகிறார் பிரசன்னா. அதனால் விஷாலின் உதவியாளர் என்கிற அளவுக்கு நமக்கு புரிய... அடுத்தடுத்து விரிகிற காட்சிகளில் நாம் புரிந்து கொள்வது இதுதான்.

அந்த ஊரில் பணக்காரர்கள் திட்டம் போட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆனால் எல்லா கொலையும் விபத்து போல சித்தரிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கி யுத்தத்தில், ஒரு பணக்கார வீட்டு குழந்தையின் நாய் குண்டடி பட்டு இறக்கிறது. கொன்றவனை கண்டுபிடிக்கணும்... என்று வருகிற குழந்தையின் பிராதுவை ஏற்றுக் கொள்கிறார் துப்பறிவாளர். நாய் கொலைக்கு புலனாயக் கிளம்பியவர், நாட்டில் நடக்கும் அந்த இன்னபிற கொலைகளையும் கண்டுபிடித்து, கொலையாளிகளை அழிக்கிறார். நடுநடுவே ஸ்லீவ்லெஸ் ஆன்ட்ரியாவும் கொள்ளைக் கூட்டத்தில் நடமாடுகிறாரா... ஜாலியோ ஜிம்கானாவாகிறது இளைஞர்களின் கண்கள்.

விஷாலின் பட வரிசையில் இந்தப்படம் அவருக்கு புது அனுபவத்தை கொடுத்திருக்கும். ஏற்கனவே இருட்டு. இதில் படம் முழுக்க கருப்புக்கண்ணாடியை கழற்றுவேனா என்கிறார் விஷால். பைட் காட்சிகள் மட்டுமல்ல... காதல் காட்சிகளே கூட புதுசுதான். தனக்கு பிடித்த வேலைக்காரியின் கையில் விளக்குமாறை திணித்து அன்பு காட்டுகிற அந்த சீன், தமிழ்சினிமாவில் இதற்கு முன்னும் சரி. பின்னும் சரி வந்ததில்லை. வரப்போவதுமில்லை.

படம் முழுக்க விஷாலின் சேஷ்டைகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்கலாம். குறிப்பாக ஹீரோயின் அனு இம்மானுவேல் வீட்டிற்குள் நுழைந்து, அவள் மாமனை அப்படியே மாடியிலிருந்து கீழே வீசிவிட்டு திரும்புற அந்த காட்சி, அடி தூள்! தியேட்டரே கைத்தட்டல்களால் கிழிகிறது. தன்னால்தான் அனு இறந்தார் என்பதை உணர்ந்து விஷால் அப்படியே தரையில் காலூன்றி அழும் அந்தக் காட்சியும் திணற வைக்கும் சென்ட்டிமென்ட்! மவுத்தார்கான் இசையெழுப்ப, அலட்டிக் கொள்ளாமல் விஷால் போடும் சண்டைகள், அவரது ரசிகர்களுக்கு திருவிழாவும் கூட! (இருந்தாலும் எம்.எஸ்.பாஸ்கரின் தொப்பியை விஷாலுக்கு மாட்டிவிட்ட மிஷ்கின் குறித்து பற்கள் தானாக நறநறப்பதால், ஒன்றும் சொல்வதிற்கில்லை)

இணை நடிகர், துணை நடிகர் ரேஞ்சுக்கு இறங்கி இன்னும் கூட உருப்படாமல் போவேன். எவன் கேட்பது? என்ற முடிவிலிருக்கிறார் போலும் பிரசன்னா. ஒரு நல்ல நடிகன் கண்ணெதிரே நாசமாகப் போவது துரதிருஷ்டம்தான்.

ஹீரோயின் அனு இம்மானுவேலின் சேவை தமிழ்சினிமாவுக்கு தேவை தேவை. அப்படியொரு அழகு. நடிப்பு. இத்யாதி... இத்யாதி... ஒரு பிக்பாக்கெட்காரி, சாகும்போது கூட தன் வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார் என்பதை கதையோடு ஒட்ட வைத்த மிஷ்கினுக்கு ஒரு சபாஷ்.

ஆன்ட்ரியாவின் ஸ்டைலிஷ் பிரசன்டேஷனுக்கு தனி அப்ளாஸ். அவரது கவர்ச்சியை மேலும் அதிகப்படுத்தி தருகிற லைட்டிங், ஒளிப்பதிவு எல்லாவற்றுக்குமாக அவர் நன்றி சொல்ல வேண்டும். படத்தில் இக்கட்டான காட்சிகளில் கூட, இவர் மட்டும் தப்பித்து ஓடுவது எதன் வழியாக தெரியுமா? திரைக்கதையிலிருக்கிற அம்மாம்பெரிய ஓட்டை வழியாக.

பாக்யராஜ் மேக்கப் நல்ல வித்தியாசம். மனுஷரை பேச விட்டிருந்தால் காமெடியாகியிருக்கும். கரெக்டாக தவிர்த்திருக்கிறார் மிஷ்கின். போலீஸ் அதிகாரி அபிஷேக்தான் அந்த கருப்பு ஆடு என்று கடைசியில் கதையை திருப்புகிறார்கள். சிரிப்புதான் வருகிறது. மற்றபடி படத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், சிம்ரன், வின்சென்ட் அசோகன் ஆகியோர் ஆளுக்கொரு ஸ்பூன் நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

படத்தில் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் வினய்தான். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. புன்னகை மாறா புதுவில்லன்.

அரோல் கரோலி வீட்டிலிருக்கும் வயலினை யாரேனும் ஒளித்து வைத்துவிட்டால் சரியாக இருந்திருக்கும். எல்லா பீலிங்ஸ்சுக்குமே வயலினை வாரி எடுத்து தேய்க்க ஆரம்பித்துவிடுகிறார். படத்தில் பாடல்கள் இல்லாதது ப்ளஸ்சா, மைனஸ்சா? அரொலியின் வயலினை நினைத்தால் ப்ளஸ். இறுக்கமான திரைக்கதையை நினைத்தால் மைனஸ்.

கார்த்திக்கின் ஒளிப்பதிவு, படு ஸ்டைலிஷான ஆங்கில படங்களுக்கு இணையானது. அந்த பிச்சாவரம் காட்டின் கழுகு பார்வை கலக்கலோ கலக்கல்.

ஒரு நாய் கொல்லப்பட்ட விஷயத்தை தேடிக் கிளம்புகிற டிடெக்டிவ், எப்படி மற்ற மற்ற கொலைகளை கண்டுபிடித்தான். அதன் பின்னணி என்ன என்பதை ஐந்தாம் வகுப்பு பாடம் போல எடுக்க வேண்டிய மிஷ்கின், அண்ணா யுனிவர்சிடி பி.எச்.டி ரேஞ்சுக்கு போட்டு குழப்பியிருப்பதுதான் சொல்லொணாத் துயர்.

துப்பறிவாளன், தன் நேர்த்தியற்ற திரைக்கதையால் கொஞ்சம் ‘த’ப்பறிவாளன்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer