Tuesday, September 26, 2017

உலகத்தின் எல்லா தொழில்களும், துறைகளும் மாற்றத்துக்குள்ளாகுபவையே. ரசனையும் அப்படித்தான். அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வதே வெற்றி பெற வழி. படம் தொடங்கும்போது, 'எ சரண் ஃப்லிம்', 'எ பரத்வாஜ் மியூசிக்கல்' என்று வரும் வார்த்தைகளைப் பார்க்கும்போது, 'உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே', அமர்க்களம் படத்தின் அட்டகாசமான காட்சிகள், ஊரெல்லாம் 'ஓ' போட வைத்த ஜெமினி, இன்றும் மீம்ஸ்களுக்கு பயன்படுத்தப்படும் வசூல்ராஜா என பல விஷயங்கள், மனதில் ஓடத் தொடங்கி எழும் எதிர்பார்ப்பை 'செவத்தக் காளை'யும் 'செந்தட்டிக் காளை'யும் காரணமே இல்லாமல் அடித்துக் கொள்ளும் ஆரம்பக்காட்சிகளே நொறுக்கி நம்மை உள்ளே அழைத்துச் செல்கின்றன.

2012ஆம் ஆண்டு, 'செவத்தக் காளை செந்தட்டிக் காளை' என்ற பெயரில் தொடங்கப்பட்டது இந்தப் படம் என்று ஞாபகம் வருகிறது. பெயரை மாற்றியது போல, கதையையும் மாற்றி இருக்கலாம். திருநெல்வேலியில், ஏற்கனவே பங்காளிப் பகையில் இருக்கும் தந்தைக்கு இரட்டைக் குழந்தைகளாக கருவிலேயே 'அப்பா வைக்கும் பெயர் எனக்குத்தான்' என்று    சண்டை போட்டுக்கொண்டே பிறக்கிறார்கள்  செவத்தக் காளையும்  செந்தட்டிக் காளையும். அன்றிலிருந்து அடிக்கடி அவர்கள் போடும்  சண்டையால் ஒரு நாள் பிரிகிறார்கள். பெற்றோரோ இரட்டையரில் ஒருவர் இறந்துவிட்டார் என்று நினைக்க, அவர் ஹைதராபாத்தில் வளர்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் இவரது இடத்துக்கு அவர் வருகிறார். என்ன, அட்டகாசம் கதையை சொல்கிறேனா ? இல்லை, இதிலும் அதே கதை தான். ஹைதராபாத் வினயை ஒரு குழு துரத்துகிறது, திருநெல்வேலி  வினயை ஒரு குழு துரத்துகிறது, இரண்டு வினய்களும் ஒருவரை ஒருவர் துரத்துகிறார்கள்.

வினய், மூன்று கதாநாயகிகள், இளவரசு, மயில்சாமி, ஞானசம்மந்தன், பிரதீப்  ராவத், அருள் தாஸ் என யாருடைய நடிப்பும் பெரிதாகப் பயன்படவில்லை. ஒரே ஒரு காதல் பின்னணி இசையில் பரத்வாஜ் தெரிகிறார். மற்றபடி பாடல்கள், பின்னணி இசையெல்லாம் விவரிக்க முடியாத வேற லெவலில் இருக்கின்றன. கிருஷ்ணரமணனின் ஒளிப்பதிவு, என்ன காரணம் என்று தெரியவில்லை, முழுமையான தரத்தில் இல்லை. தொழில்நுட்பக் கலைஞர்களின் வேலையெதுவும் நம் கவனத்தில் இல்லாமல் போகிறது.

"செத்த மாடு சத்தம் போடுது", "பறைய சொல்றியா?"  "இல்ல, பகைய சொல்றேன்", இப்படி ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் தெரியும் சரணிடம் நமக்குக் கேட்கத்தோன்றுவது, 'காரணமே இல்லாமல் இரட்டையர்கள் ஏன் அடித்துக் கொள்கிறார்கள்?, அது அவர்களது இயல்பு என்றால், அந்த சண்டைகள் சுவாரசியமாகவாவது  இருக்க வேண்டுமல்லவா ?  வில்லன்களாவது பலமாக இருக்கவேண்டும், நமக்கே அவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது... பெண் கதாபாத்திரங்கள் பலரின் உடைகளும், உடல்மொழியும் ஏன் இப்படி? 2012லேயே வெளியாகியிருந்தாலும் இந்தப்படம் ரசிக்கப்பட்டிருக்குமா?  சென்சாரிடம் ஒரு சந்தேகம். ஆண்கள் புகைபிடிக்கும் அதே காட்சியில், காஜலின் சிகார் மட்டும் 'ஃபேட்' செய்யப்பட்டு காற்றிலிருந்து புகை வந்துகொண்டிருக்கிறது. எது காப்பாற்றப்பட்டிருக்கிறது? இயக்குனர்  சரண், மீண்டும் ஆழமான வசனங்கள், நல்ல இசை, வரிகள், ஒரே ஃபிரேமில் பல அடுக்குகள் கொண்ட காட்சிகள் என பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கு பெஞ்ச்மார்க்காகத் திகழ்ந்த தன் பழைய படங்களின் தரத்தில், ஆனால்  புதிய ரசனைக்கேற்ப ஒரு படத்துடன் வந்தால் மிகுந்த மகிழ்ச்சி.

ஆயிரத்தில் இருவர், அதிர்ச்சியில்  ஒருவர்...(படத்துக்கு போனவர் தான்).

0 comments :

Post a Comment

 
Toggle Footer