Thursday, September 28, 2017

கல்கிசைப் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சரமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

செய்தியாளர் மாநாட்டின் போது ரோஹிங்யா அகதிகள் மீது சில பௌத்த பிக்குள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என ஊடவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தின் போது பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததையும் அவர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “உண்மையில் இச் சம்பவத்தில் குற்றமிழைத்திருந்தால் பௌத்த பிக்குளை மட்டுமல்ல வெறுமனே பார்த்துக்கொண்டிருந்த பொலிஸாரையும் கைதுசெய்ய வேண்டும்.

ரோஹிங்யா அகதிகள் என்பவர்கள் யார்? அவர்களின் நிலை என்ன? என்பது தொடர்பில் அந்த பௌத்த பிக்குகளுக்கு என்ன தெரியும்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

உண்மையில் ரோஹிங்யா அகதிகள் 2008ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வரத்தொடங்கிவிட்டனர். அப்போது இந்த பௌத்த பிக்குகள் என்ன செய்து கொண்டிருந்தனர். அது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமென்பதாலா அவர்கள் மௌனித்திருந்தனர்?

இந்த வகையில் 2008இல் 55ரோஹிங்கிய அகதிகள் இலங்கைக்கு வந்தனர். இவர்கள் 2012 வரை இலங்கையில் தங்கியிருந்தனர். அதன் பின்னர் 2013இலும் 101 அகதிகள் இங்கு வந்தனர். அவர்கள் 2015இலேயே மீளத் திருப்பியனுப்பப்பட்டனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடனேயே இங்கு தங்கியிருந்தனர்.

இம்முறை ஆண்கள் ஏழு பேர், பெண்கள் ஏழு பேர், குழந்தைகள் 16 பேரென 30 பேர் வந்திருந்தனர். ஒரு கர்ப்பிணித் தாய்க்கு இங்கு வந்தபின்னரே குழந்தை பிறந்துள்ளது. இங்கு அடைக்கலம் தேடி வந்த அகதிகளுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்த பெருமானின் போதனையில் எங்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது என நான் அந்த பௌத்த பிக்குகளிடம் கேட்க விரும்புகின்றேன். நான் ஒரு பௌத்தன் என்ற வகையில் இது குறித்து பெரும் வருத்தமடைகின்றேன்.

உலகின் ஏனைய நாடுகள் அகதிகளுக்கு அடைக்கலமளித்து அவர்களைப் பாதுகாக்கின்றன. அந்த வகையில் இவர்களும் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடனேயே தங்கியுள்ளனர். கடந்த முறையும் இங்கிருந்து விட்டு நாம் மீள அனுப்பிய அகதிகளை கனடா போன்ற நாடுகள் விருப்பத்துடன் பொறுப்பேற்றுக்கொண்டன.

எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற 20 இலட்சம் அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தஞ்சம் வழங்கி, பாதுகாத்து, உணவளித்து, இருப்பிட வசதிகளையும் வழங்கியுள்ளன.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer