Tuesday, September 26, 2017

மியன்மார்க்கின் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கல்கிசை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகள் 30 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

07 பெண்கள், 07 ஆண்கள் மற்றும் 16 சிறுவர்கள் இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சட்டவிரோதமாக மியன்மார் அகதிகள் சிலர் நாட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறி, இன்று செவ்வாய்க்கிழமை காலை அகதிகள் தங்கியிருந்த கல்கிசை பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலை தோன்றியிருந்தது.

இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தி, மியன்மார் அகதிகளை அழைத்துச் சென்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் அங்கு தங்கியிருந்தமை தொடர்பில் மிரிஹானை பொலிஸ் நிலையம் அறிந்திருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி காலை காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து 30 மியன்மார் அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் யாழ் பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்குமாறு கடந்த மே மாதம் 02ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கமைய இவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் கல்கிசை பிரதேசத்தில் தங்க வைத்ததாக, மியன்மார் அகதிகளுக்காக நீதிமன்றில் வாதிட்டுவரும் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.

இவர்கள் குறித்த பிரதேசத்தில் தங்கியிருப்பது தொடர்பாக கல்கிசை பொலிஸாருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு கல்கிசை பொலிஸார் பதில் கடிதம் அனுப்பியிருந்ததாகவும் அவர் கூறினார்.

அதேவேளை குறித்த அகதிகள் குழு அண்மையில் இலங்கைக்கு வந்தவர்கள் அல்ல என்றும், இலங்கையில் இவர்கள் தவிர மியன்மார் அகதிகள் வேறு எவரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சட்டவிரோதமான முறையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் எவரும் நாட்டில் தங்க வைக்கப்படவில்லை என்றும், சிலர் அரசியல் நோக்கத்திற்காக பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்வதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer