Friday, September 1, 2017

மத்திய அரசு கொண்டு வந்துள்ள “நீட்” தேர்வு மூலமாக மருத்துவராகும் வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்து, பட்டியல் தயார் செய்துவருகிறார் திமுக மாநில மாணவரணி அமைப்பாளர் தமிழரசு. இவர் சேலம் மாவட்டத்தில் மருத்துவம் படிப்தற்கு தேவையான கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் தேர்வால் அந்த வாய்ப்பை இழந்துள்ள இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களின், விபரங்களை திரட்டி வருகிறார். முதல் கட்டமாக, இவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்திக்க வைத்து அவருடைய ஒப்புதலுடன், டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் முன்பாக நிறுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பட்டியலில் உள்ள ஒருவரைப் பற்றி மட்டும் பாப்போம்..

சேலத்தில் உருக்காலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தவுடன், சேலத்தின் மேற்குப் பகுதியில் இருந்த 4,700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது மாநில அரசு. அதனுள் இருந்த 65 ஊர்களில் வாழ்ந்த மக்களையும், அவர்களின் நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட உடமைகளை பறித்துக்கொண்டு, ஏக்கருக்கு ரூ.900 பணத்தையும் கொடுத்து, கலைஞர் கருணாநிதி நகர் என்ற இடத்தில் குடியிருக்க ஐந்து செண்டு நிலத்தையும் ஒடுக்கிக்கொடுத்து அவர்களை வெளியேற்றியது மாநில அரசு.

பொன்னாக்கவுண்டனூர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த கிருஷ்ண படையாச்சி என்பவர் நான்கு மற்றும் இரண்டு வயதுடைய தன்னுடைய இரண்டு மகன்களையும்  கூட்டிக்கொண்டுவந்து, கலைஞர் கருணாநிதி நகரில் கொடுத்த ஐந்து செண்ட் நிலத்தில் குடிசை அமைத்து வாழ்க்கையைத் தொடங்கினார்.

“கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப உலகில் அழிவில்லாத செல்வம் கல்விதான் என்பதை உணர்த்து தன்னுடைய இரு மகன்களையும் படிக்கவைக்க முயன்றார் கிருஷ்ண படையாச்சி. ஆனால், குடும்ப சூழல் காரணமாக நெசவு தொழிலுக்கு சென்ற அவருடைய மகன்கள் இருவருக்கும் கல்வி கனவு கைகூடவில்லை.

தன் தந்தை கண்ட கனவை தன்னால் நிறைவேற்ற முடியாமல் போனாலும், தன்னுடைய குழந்தைகளையாவது படிக்க வைக்கவேண்டும் என்ற வெறி முதல் மகன் வடிவேலுக்கு வந்தது. இதனால், தன்னுடைய மகள் கவுசல்யா, முதல் மகன் அறிவழகன், இரண்டாம் மகன் ரஜினிரகு என மூவரையும் உள்ளூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார்.

பொறியியல் கல்லூரியில் EEE பட்டம் பெற்ற கவுசல்யா பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். முதல் மகன் அறிவழகன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை படிப்பை இந்த ஆண்டுதான் முடித்துள்ளார். இவர்கள் இருவருமே சராசரியாக படிக்கும் மாணவர்கள் தான்.

தீவிர ரஜினி ரசிகரான வடிவேல், தன்னுடைய மூன்றாம் குழந்தைக்கு ரஜினிரகு என்று பெயர் வைத்ததுடன் தன்னுடைய நம்பிக்கையை ரஜினி மீது வைத்தார். அவருடைய எதிர்பார்ப்பை உணர்ந்த ரஜினிரகுவும் பள்ளியிலேயே முதல் மாணவனாக படித்தது மட்டுமில்லாமல், பத்தாம் வகுப்பு தேர்வில் 497-மதிப்பெண் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். தன் மகன் நிச்சயம் மருத்துவராக வருவான் என்ற நம்பிக்கையில், இருபது ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தன்னுடைய வீட்டுக்கு கதவு வைக்காமலும், நிலத்துக்கு சிமெண்டு கான்கிரீட் கூட போடாமுடியாமல் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குழந்தைகளின் கல்விக்காவே செலவு செய்து வந்துள்ளார் வடிவேலு.

வடிவேலின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  ரஜினிரகு 1190- மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கலந்தாய்வுக்கான கட் ஆப்பில் 199.50% எடுத்துள்ளார். தமிழக கிராமப்புற மாணவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்ற நோக்கில், எதிர்பாராத நேரத்தில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வில் மாணவர் ரஜினிரகு 200-மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால், வடிவேல் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக கண்ட கனவு, வெறும் கனவாகவே போனது.

இதைத்தொடர்ந்து, மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கி கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் சட்டமும் செயல்வடிவம் பெற முடியாமல் உள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து விசைத்தறி நெசவு செய்து வருகிறார் மாணவர் ரஜினிரகு.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்துக்கு பழனிமலைக்கு போவதையும், மார்கழி மாதம் சபரிமலைக்கு போவதையும் வழக்கமாக கொண்டிருந்த வடிவேல் இப்போது, முழுநேரமும் டாஸ்மாக் கடையிலேயே கிடப்பதாக சொல்லும் ரஜினிரகு, “என்னை டாக்டராக்க வேண்டும் என்பதற்காகவே என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தனர். இன்று வரை எங்கள் குடும்பத்தில் யாருமே கட்டிலில் படுத்ததில்லை. பாய் கூட இல்லாமல் மண் தரையில் தான் படுத்து வருகிறோம். அக்கா தனக்கு திருமணம் கூட இப்போதைக்கு வேண்டாம். தம்பி டாக்டர் ஆன பின்னர் தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். நீட் தேர்வில் நான் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வாங்க முடியவில்லை. இப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...” என்கிறார்.

ரஜினிரகுவின் தாயார் பெருமாயி, “படிக்கிற நேரம் போக மீதிநேரம் பசங்க மூணு பேருமே எங்க கூட சேர்ந்து தறி ஓட்டுவாங்க. நெசவு செய்வதில் கிடைக்கும் காசில் சாப்பாட்டுக்கு வாங்கியது போக மீதி எல்லா காசையும் பசங்க படிப்புக்குத்தான் செலவு செய்தோம். சேலம் வி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரிக்கு இன்னும் 20,000-ஆயிரம் ரூபாய் பணம் கட்டவேண்டியுள்ளதால், என் மகளுக்கு இன்னும் டி.சி. வாங்க முடியவில்லை. அதனாலே, எங்க பொண்ணு நல்ல கம்பெனிக்கு வேலைக்கு போகவும் முடியவில்லை. பசங்களை நல்லா படிக்க வைக்கணும், படிக்கவைக்கணும்முன்னு சொல்லிகிட்டே இருந்த மனுஷன் இப்போ சாமியும் இல்லை, பூதமும் இல்லையின்னு சொல்லிக்கிட்டு சாராய கடையிலேயே இருக்கிறார்” என்று கண்ணீர் விடுகிறார்.

“இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.” என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

மோடி அரசும், எடப்பாடி அரசும் இந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல.. நாட்டு மக்களுக்கும் நல்ல அரசாக இல்லை என்பதுதான் உண்மை.

- பெ.சிவசுப்ரமணியம்
nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer