Tuesday, September 26, 2017

யாழ். புங்குடுதீவு மாணவியான வித்தியா, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொடூர சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவிருக்கின்றது.

மாணவி வித்தியா வன்புணர்வு, படுகொலை தொடர்பான வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நாளை மேற்படி தீர்ப்பை வழங்கவிருக்கின்றது.

உலகையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமென வர்ணிக்கப்படுகின்ற இக்குற்றச் செயலின் வழக்குத் தீர்ப்பை உலகெங்கும் ஏராளமானோர் பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இத்தீர்ப்பு தொடர்பான விபரங்களையும், வழக்கின் பின்னணியையும் திரட்டி உடனுக்குடன் அறிக்கையிடுவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் சமூக ஆர்வலர்களும் யாழ்ப்பாணத்துக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வழக்கின் தீர்ப்பைப் பொறுத்த வரை மனிதநேயம் மிக்க அனைவரது எதிர்பார்ப்பும் ஒன்று தான். ‘வித்தியா’ என்ற அம்மாணவிக்கு இத்தனை கொடூரத்தை இழைத்த கொடியவர்களுக்கு அதியுச்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

இக்குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனையானது, வன்முறை சுபாவம் கொண்ட அனைவருக்குமே ஒரு பாடமாக அமைய வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாளைய தீர்ப்பானது எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.

இவ்வாறு தான் மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை நினைத்து இதுகாலவரை கொதித்துப் போயிருக்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, கொலை என்றெல்லாம் எத்தனையோ சம்பவங்கள் உலகெங்கும் இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

ஆனாலும் மாணவி வித்தியாவுக்கு நேர்ந்த அவலம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.

அந்தச் சின்னச்சிறு பிஞ்சுக்கு நடந்த கொடுமைகளைப் பார்க்கின்ற போது, குற்றமிழைத்தவர்கள் எவ்வகையிலும் மனித குலத்துக்குள் உள்ளடக்கப்பட முடியாதவர்களென்பதே உண்மை.

காட்டில் வாழும் கொடிய மிருகங்களை விட மோசமான ஈனப் பிறவிகள் அவர்கள்!

மனித குலத்துக்கே எதிரான இத்தனை கொடியவர்கள் சமூகத்தில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள். அவர்கள் எக்காலத்திலும் மனம் திருந்துவார்களென எதிர்பார்க்கவும் முடியாது.

வித்தியா பாலியல் வன்புணர்வு, படுகொலை சம்பவத்துக்குப் பின்னால் இதுவரை வெளிவராத ஏராளமான மர்மங்கள் உள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தன.

வெளிநாடுகளில் வசிக்கின்ற சிலரும், உள்நாட்டைச் சேர்ந்த சிலரும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்தமை அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இவ்வாறான தகவல்களையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது, மாணவி வித்தியாவின் மரணத்தைச் சூழ புலப்படாத மர்மங்கள் நிறைந்திருப்பது தெளிவாகின்றது.

இவ்வாறான அத்தனை மர்மங்களின் முடிச்சுகளும் நாளை வழங்கப்படவிருக்கின்ற தீர்ப்பின் போது அவிழ்க்கப்பட்டு விடுமென்றே தெரிகின்றது.

வித்தியா வழக்கைப் பொறுத்த வரை ஆரம்பம் முதல் இறுதி வரை அத்தனை விசாரணைகளிலும் வெளிவந்த தகவல்கள் ஒவ்வொன்றுமே பரபரப்பு மிகுந்தவையாகும். தகவல்கள் ஒவ்வொன்றுமே முன்னுக்குப் பின் முரணானவையாகும்.

இவ்வழக்கில் புதிது புதிதாக சந்தேக நபர்களும் சாட்சிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டதுமுண்டு. எனவேதான் இவ்வழக்கு விசாரணையின் போது இத்தனை இழுபறிகளும் தாமதமும் தோன்றின.

ஆனாலும் அத்தனை தடைகளையும் தாண்டி விசாரணைகள் கச்சிதமாக முடிவடைந்ததையடுத்து, நாளைய தினம் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவிருக்கின்றது.

இவ்வழக்கை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு தாமதங்கள் எதிர்கொள்ளப்பட்ட போதிலும், மனிதாபிமானத்தின் பேரில் விசாரணை நடவடிக்கைகளில் உதவியோர் பலர் உள்ளனர். அவர்கள் அனைவருமே நீதிதேவதையின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்களாவர்.

பாதிக்கப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவும் நேர்மையுடன் செயற்பட்ட அதிகாரிகள் அனைவருமே பாராட்டுக்குரியவர்களாவர்.

யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் இவ்வழக்கில் எடுத்துக் கொண்ட விசேட அக்கறையையும், அவர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களையும் இவ்விடத்தில் விசேடமாக குறிப்பிடுவது அவசியம்.

ஆனாலும் அத்தனை சவால்களையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டவர் நீதிபதி இளஞ்செழியன்.

இவ்வாறான பலரது கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் நாளை வெளியாகப் போகும்

தீர்ப்பானது, வித்தியாவின் ஆன்மாவுக்கு அமைதியளிப்பது ஒருபுறமிருக்க, எதிர்காலத்தில் எமது நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பதிவாக அமையுமென்றும் எதிர்பார்க்கலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer