Friday, September 1, 2017

நல்லதே நடக்கும்... தம்பிதுரை!

‘நீட் விலக்குக்குக்கோரி தீவிர முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் இராதாகிருஷ்ணன் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்று தொடர்ந்து செய்திகள் வந்தபோதும்கூட மாணவர்கள் ஓரளவுக்குத்தான் நம்பிக்கொண்டிருந்தார்கள். “நீட் தேர்விலிருந்து விலக்கு பெறவே தமிழக அரசு பாடுபட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முயற்சித்து வருகிறோம்.

மத்திய அரசிடம் ஓராண்டு விலக்கு கேட்கவில்லை. நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கேட்டே ஆலோசித்து வருகிறோம். நல்லதே நடக்கும் இதனை மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. அதனால்தான், மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து, முயற்சி செய்து வருவதால் நல்லதே நடக்கும்” என்று எதிர்பார்க்கிறோம் மக்களவை துணைசபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை அறிவிக்க நம்பிக்கை துளிர்த்தது.

ஓராண்டு விலக்கு- நிர்மலா சீதாராமன்!

நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்று அடம்பிடிக்கும் பா.ஜ.கவின்… நீட் தேர்வு விலக்கு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட மத்திய தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென்று, “நீட்டிலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தரும்”என்று அறிக்கையிட ஐ.சி.யூவில் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்த நோயாளி உயிர்பிழைத்ததுபோல் மாணவர்கள்- பெற்றோர்கள் மத்தியில் பெருமூச்சு ஏற்பட்டது.

நல்ல முடிவு வரும்… பொன். ராதாகிருஷ்ணன்!

மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனோ, “தமிழக பள்ளிகளில் தகுதி நிறைந்த கல்வி கற்பிக்கப்படாத நிலை உள்ளது. அதனால், நீட் தேர்வுக்கு கால அவகாசம் கேட்கும் தமிழக அரசின் கோரிக்கை கவனத்தில் கொள்ளவேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவப்படிப்பில் வாய்ப்பு தரவேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. எனவே, நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று நம்பிக்கையூட்டினார்.

நீட் விலக்கு அனுமதி- அட்டர்னி ஜெனரல்!

தமிழகத்துக்கு  ‘நீட்’ லிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் அவசர சட்ட வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்துறை அமைச்சகமும் ஏற்றது. சட்டம், சுகாதாரத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறைகளுக்கும் இந்த அவசர சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டது. வரைவு குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தமிழக அரசின் சட்ட வரைவை ஆய்வு செய்து வருவதாக வேணுகோபால் தெரிவித்திருந்தார்.

இதனால், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அனுப்பியுள்ளார். ஆகவே, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்கப்படும் தமிழக சுகாதாரத்துறை தெரிவிக்க ‘ஹப்பாடா இந்த வருடம் நீட்டிலிருந்து தப்பித்தோம்’ என்று டாக்டர் கனவை நனவான மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக்கொண்டிருந்த அனிதா போன்ற மாணவர்கள் பெற்றோர்களின் தலையில் பேரிடியாய் வீழ்ந்துவிட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

தவறான வழிகாட்டல்-நளினி சிதம்பரம்!

நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்ச்சேர்க்கை நடத்தவேண்டும் என்ற மாணவர்களின் சார்பாக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரமோ,"நீட்தேர்வுக்கு விலக்களிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம்அரசியல் சாசன சட்டப்படி செல்லாது என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசே தெரிவித்துவிட்டதால், எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குவேண்டுமானால், தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும். நீட் குழப்பங்களுக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பாளி. அதுதான், மாணவர்களுக்கு தவறான நம்பிக்கையை அளித்துவிட்டது” என்றார்.

தயார்நிலையில் இரண்டுப்பட்டியல்!

ப்ளஸ்டூ மதிப்பெண் அடிப்படையிலும் நீட் தேர்வின் அடிப்படையிலும் இரண்டு பட்டியலை தயாரித்து வைத்திருந்தது தமிழக மருத்துவக்கல்வி இயக்குனரகம். அதனால்தான், விலக்கு அளிக்கமுடியாது என்று உச்சநீதிமன்றத்தீர்ப்பு வெளியான மறுநாளே நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் பட்டியலை வெளியிட்டார் டி.எம்.இ. எட்வின் ஜோ. ஆக, நோயாளியின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடுகிறோம் என்று ஐ.சி.யூவில் பிணத்தை வைத்துக்கொண்டு தீவிர சிகிச்சை அளிப்பதுபோல ‘நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்துவிடும்’என்று கடைசி நிமிடம் நம்பவைத்து மாணவர்களின் எதிர்காலத்தை துடிதுடித்து இரத்தம் சொட்ட அறுத்துவிட்டார்கள் மாநில-மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும். இந்த, நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மாணவர்களின் சாபம் சும்மா விடுமா என்ன? அனிதாக்களின் டாக்டர் கனவை மட்டுமல்ல...அனிதாக்களையே குழிதோண்டி புதைத்த நம்பிக்கை துரோகிகள் இவர்கள்தான்!!!

-மனோசெளந்தர்
nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer