Monday, September 18, 2017

'பெண்ணியம்' பேசும் படங்கள் வரும்போது,  பொதுவாக, பெண்களின் பார்வையில் இருக்கிறதா, ஆண்களின் பார்வையில் இருக்கிறதா, அரசியல் சரித்தன்மை இருக்கிறதா என்று பல கேள்விகளும், வாதங்களும் உண்டாகும். 'மகளிர் மட்டும்' பெண்ணியம் பேசும் படம் என்பதை விட, பெண்களைக் கொண்டாடும் படம் என்பதே சரியாக இருக்கும். படத்தின் பல காட்சிகளும் கொண்டாட்டமாகவே இருக்கிறது. பெண்களைக் கொண்டாடும் படத்தில், சங்கர்-கௌசல்யா என்று காதல் ஜோடிகளுக்குப் பெயர் வைத்து  உடுமலைத் துயரை நினைவு படுத்தியது, பாலச்சந்திரன் புகைப்படத்துடன் மெரீனாவில் நடந்த  நினைவேந்தல் நிகழ்வில் நாயகி பங்கேற்பது, சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைப்பது என பல நிகழ்கால அரசியல் நிகழ்வுகளைச்  சரியான இடங்களில் பேசியிருப்பதற்கு இயக்குனர் பிரம்மாவைக் கைகுலுக்கலாம்.

ஆவணப்பட இயக்குனர் 'பிரபா'வாக ஜோதிகா, அத்தனை இளமை, அத்தனை துறுதுறுப்பு, அத்தனை அழகு. 'புல்லட்' ஓட்டுவது, சட்டென 'டாக்சி'யின் மேலேறிவிடுவது, குதூகலத்தில் பறையடிப்பது, தாஜ்மகாலுக்கு புதிய அறிமுகம் கொடுப்பது, நினைத்த நேரத்தில் நினைத்த ஊருக்கு செல்வது என புதிய தலைமுறை, 'ஐடியல்'  சுதந்திரப் பெண்ணாக ஜோதிகா வளம் வந்திருக்கிறார். தன் வருங்கால கணவரின் தாய், 'கோம்ஸ்'ஸான ஊர்வசியுடன் வாழும் அவர், ஊர்வசியின் பள்ளித் தோழிகளான  பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரைக் கண்டுபிடித்துச்   சந்திக்க வைக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் அவர்களின் நிலையில்  அந்தச்  சந்திப்பு ஏற்படுத்தும் மாற்றம் தான் 'மகளிர் மட்டும்'.

ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா மூவரின் மிகச் சிறப்பான நடிப்பில், தன் வெகுளித்தனத்தாலும், நகைச்சுவையாலும் மற்ற இருவரையும் முந்துகிறார் ஊர்வசி. இவர்களின் பள்ளிக் கால பாத்திரங்களாக நடித்திருப்பவர்களும் மிகச்சிறப்பாக அமைந்திருப்பது ஆச்சரியம். நான்கு பெண்களும், ஆதிக்கம் செலுத்தும் கதையில், இவர்களைத் தாண்டி கவனம் ஈர்ப்பவர் பாவல் நவகீதன். ஆக்ராவில் வாழும் தமிழ்ப் பூர்விக அரசியல் இளைஞராக உடல் மொழியிலும், 'டேய்டீ...' என்று இழுக்கும் வசன உச்சரிப்பிலும் அசத்துகிறார். இவர்களைத் தவிரவும் மாதவன், விதார்த்,  லிவிங்ஸ்டன் என 'காஸ்டிங்கில்' ஆச்சரியங்கள் உண்டு. நாசரின் திறமைக்கு பெரிய வேலை இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு  தன் 'டிராக்கி'ற்கு வந்திருக்கிறார் ஜிப்ரான். 'வாடி திமிரா'வில் எனர்ஜி, பின்னணி இசையில் பல கலாச்சாரங்களையும் கலந்த விருந்து படைத்திருக்கிறார். மணிகண்டனின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பலவித நிலப்பரப்புகளும் நமக்கு அழகிய பயண அனுபவத்தைத் தருகின்றன.

பெண்களின் நிகழ் கால பிரச்சனைகள் பலவற்றையும் பேச இடமளிக்கும் கதை தான் என்றாலும், அத்தனை பிரச்சனைகளையும் அரசியலையும் பேசிவிட வேண்டுமென்ற திணிப்பே சில இடங்களில் சலிப்பாக உணர வைக்கிறது. மலைவாழ் மக்களின் வழக்கம் பற்றிய விளக்கம் ஒரு எடுத்துக்காட்டு. பள்ளிக்கால காட்சிகள் ஆரம்பத்தில் சுவையாக இருக்கின்றன. போகப்போக வருபவை பெரிய சுவாரசியம் இல்லாமல் இருப்பதும் ஒரு குறை. பாடமெடுக்கும் மற்றும் தேவையைத் தாண்டி நீளும்  சில காட்சிகளைக் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பான கொண்டாட்டமாக இருந்திருக்கும். குறைகளைத் தாண்டி, நாடகத்தனமான புரட்சி செய்யாத, கண்ணீரும் கோபமும் நிறைந்திராத, அனைவரும் ரசிக்கக்கூடிய பெண்கள் படம் இது.

மகளிர் மட்டும், கொண்டாட்டம்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer