Friday, September 15, 2017

காட்சி மொழியை முழுமையாய்ப் பேசத் தெரிந்த இயக்குனர்களில் முக்கியமானவர் மிஷ்கின். பல சமயம் வெற்றிகரமாகவும், சில சமயங்களில் சறுக்கலாகவும் அமைந்திருந்தாலும், தன் மொழியைப் பிடிவாதமாக பயன்படுத்தும் கலைஞர் அவர். 'துப்பறிவாளனி'ல்  பேசிய விஷயம் வெற்றிகரமாக  சென்றடைந்ததா?

தனியார் துப்பறிவாளர் 'கணியன் பூங்குன்றனா'ன விஷால், எவ்வளவு பணம் கிடைத்தாலும், அவருக்கு சுவாரசியமாக இல்லாத வழக்குகளை எடுப்பதில்லை. ஒரு சிறுவனுக்காக அவர் எடுக்கும் வழக்கின் கண்ணிகள், பல துப்பறியப்படாத கொலைகளை நோக்கி இழுத்து செல்கின்றன. துப்பறிதல் தான் திரைப்படம். உடல் மொழி, பேச்சு, செயல் என தனக்குப் பிடித்த 'ஷெர்லாக் ஹோம்சை' தன் நாயகனாக வடிவமைத்திருக்கிறார். விஷாலும் தன்னை முழுதாக ஒப்படைத்திருக்கிறார். நிலையில்லாத படபடப்பு, 'பொறி' தட்டியவுடன் பரபரப்பு, அத்தனை பேரைத் தாக்குவதையும் நம்பவைக்கும் உடல் என 'பெர்ஃபெக்ட்' துப்பறிவாளர் விஷால். படம் நெடுக அவருடன் இருக்கும் கதாபாத்திரம் பிரசன்னாவுக்கு. சும்மாவே நாயகனுடன் சுற்றுபவராக இல்லாமல் முக்கியத்துவமுள்ள நண்பன். பிரசன்னாவின் இருப்பு பலம் சேர்த்திருக்கிறது. பாக்யராஜ், வினய், சிம்ரன், ஷாஜி, 'ஆடுகளம்' நரேன் என அனைவரும் கதையின் சஸ்பென்ஸையும் பதற்றத்தையும் தக்க வைத்திருக்கின்றனர். நாம் சற்றும் எதிர்பார்க்காத  பாக்யராஜின் பாத்திரம் ஆச்சரியம். குற்றத்தை, கலையாய் நிகழ்த்தும் மிஷ்கினின் கற்பனைக்கு அழகாய் வடிவம் கொடுத்துள்ளார் வினய்.  அவரது குரலும், உடல் மொழியும்  உடைகளும் சிறப்பாய் பங்களித்திருக்கின்றன. ஆண்ட்ரியா, தேவையானதைத் தந்திருக்கிறார். அனு இம்மானுவேல் அழகான திருடி.      

படம் நெடுக புத்தகங்கள் பெரும் பங்களித்திருக்கின்றன. செட் ப்ராபர்ட்டியாக மட்டுமில்லாமல் கதையிலும் பங்களித்திருக்கின்றன. மிஷ்கினின் முத்திரையான கால்களைக் காட்டும் 'லோ ஆங்கிள்' காட்சிகள் கிட்டத்தட்ட இல்லை என்பது சின்ன ஏமாற்றம், பெரிய ஆறுதல். கொலைகளில் பயன்படுத்தப்படும் அறிவியல், துப்பறிவதில் இருக்கும் விவரங்கள் என திரைப்படத்தை  ஆழ்ந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு படத்தில் விரிந்திருக்கிறது. அதே வேளையில், அதீத விவரங்கள், ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களை கண்ணைக் கட்டி விட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி, பின்னர் இரண்டாம் பாதியில் மீட்டு, சிறப்பாக முடிகிறது. இந்த நீளம் படத்திற்குத் தேவையென்றாலும் சற்று சோதிக்கிறது. குழந்தைகள், எளிய மனிதர்கள், குற்றம் செய்பவர்கள் பின்னும் இருக்கும் உறவுகள் என மிஷ்கினின் அன்பு படம் நெடுக நிறைந்துள்ளது. விஷால், அனு இடையிலான காதல், சற்று அவசரமாக செல்வதைப் போன்ற உணர்வு. அடுத்தடுத்து கொலைகள் நடப்பது, அவை ஏற்படுத்தும்  பாதிப்பைக் குறைக்கின்றது.

சண்டைக் காட்சிகள் பெரும் பலமாக இருந்து ரசிக்க வைக்கின்றன. அரோல் கரோலின் இசையும், கார்த்திக் வெங்கடராமனின் ஒளிப்பதிவும் மிஷ்கினின் மொழியை மிக அழகாகப் பேசியிருக்கின்றன. ஒரு திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள அத்தனை கலைகளும் தான் நினைப்பதை இத்தனை கூர்மையாய் செய்திருப்பதில் மிஷ்கின் பிரம்மாண்டமாய் நிற்கிறார். பல காட்சிகள் திரையில் இழை, இழையாக   நெய்தது போன்று அழகியல் உணர்வு. நீளமும், துப்பறியும் பயணத்தில் இருக்கும் அடுக்குகளும் சற்று அளவாய் இருந்து ஒத்துழைத்திருந்தால் இன்னும் பெரிய அனுபவம் தந்திருப்பான் 'துப்பறிவாளன்'.

மிஷ்கினின் மொழியில் எழுதப்பட்ட ஒரு க்ரைம் கவிதை!

0 comments :

Post a Comment

 
Toggle Footer