Sunday, September 10, 2017

"என்னதான் நடக்கிறது, தமிழ்நாட்டில்?'' என்று  பிறர் கேலியாகக் கேட்கும் அளவுக்கு இங்கே அரசியல் படுகேவலமாகப் போய்க்கொண்டிருக்கிறது. நமக்குக் கேவலம் ஏற்படுத்தியிருப்பவர்கள் அ.இ.அ.தி.மு.க. சுயநல அரசியல்வாதி. நபர்களை ஒதுக்கிவிட்டு சில வரலாற்றுப் போக்குகளைப் பார்த்தால் மேலும் ஏமாறாமலிருக்க மக்கள் ஏதாவது பாடம் பெறமுடியும்.

கட்சிப் பணிக்குப் போனார் காமராஜ். அடுத்த  நிலையில் இருந்த பக்தவத்சலம் முதல்வரானார். பிரச்சினை இல்லை. அண்ணா மறைந்தார். பிரச்சினை வந்தது கருணாநிதி முதல்வரானார். முதல் இடத்திற்குப் போட்டியிட்ட நெடுஞ்செழியன் இரண்டாம் இடத்துடன் திருப்திப்பட்டார். எந்தப் பேச்சுத்திறமையும் எழுத்து வலிமையும் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியதோ, அது எம்.ஜி.ஆரின் சினிமா மாயையில் அழிந்துபோயிற்று. பேசமுடியாத  நிலையிலும் எம்.ஜி.ஆர். முதல்வராகத் தொடர்ந்தார். உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேக நிலையிலும் ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்தார்.

ஆக தமிழ்நாட்டு அரசியலில் கொள்கை போயிற்று; எழுத்து, பேச்சுத் திறமைக்கு மதிப்பு போயிற்று. "அழகான முகம் மட்டும் போதும் ஆட்சியைப் பிடிக்க' என்ற அறிவுக்குப் புறம்பான அவல நிலை வந்தது.

எம்.ஜி.ஆரின் கட்சி, சினிமா தைத்துத் தந்த ரெடிமேட் சட்டை. அந்தக்கால காங்கிரஸ்காரர்களைப்போல் அவர் நூல் நூற்கவில்லை. தி.மு.க.வினரைப் போல தி.க. மற்றும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடமிருந்து துணி வாங்கிச் சட்டை தைத்துக்கொண்டார்கள். எம்.ஜி.ஆருக்கு சினிமா ரசிகர்கள் தொண்டர்களானார்கள்; அதே தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு அடிமையானார்கள்.

மாறிக்கொண்டே வந்த நிலைமையைப் பார்த்த தமிழ்நாட்டு அறிவுஜீவிகளோ சமூக ஆர்வலர்களோ அப்போது கொதித்து எழவில்லை. நடந்ததையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். அங்கேதான் இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் சரிவும் அழிவும் தொடங்கியது.

அரிசி விலையைக் குறைப்பேன் என்ற வாக்குறுதி தந்த அண்ணா ஆட்சியைப் பிடித்தார். அடுத்து வந்தவர்கள் பலவற்றையும் இலவசமாகத் தந்தார்கள். ஆட்சியைப் பிடித்தார்கள். அப்போது நம் தமிழ்நாட்டின் பொருளாதார மேதைகள் யாரும் எந்தப் போக்கையும் எதிர்த்துப் போராடவில்லை. நம் அரசியல்வாதிகள் தாங்கள் யாராலும் தட்டிக் கேட்கப்பட முடியாத தனி இனம் என்ற இறுமாப்பில் வளர்ந்தார்கள். மக்கள் எதையும் கேட்க முடியாது என்பது சரி. ஆனால் இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் தன் கடமையைச் செய்ய வேண்டாமா? செய்தாரா? செய்யவில்லை என்றால் என்ன காரணம்?

கூவத்தூரில் அடைத்து வைத்த எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க வேண்டும் என்று கவர்னர் சொல்லவில்லை. பிறரும் சொன்னதாகத் தெரியவில்லை. "அடைத்து வைக்கப்பட்டவர்கள் பத்து நாட்கள் தங்கள் தொகுதிக்குச் சென்று மக்களை சந்தித்த பிறகு, சட்டமன்றதிற்குச் செல்லட்டும்' என்று எந்த அரசியல், சமூக, நீதி அமைப்போ வற்புறுத்தவில்லையே, ஏன்?

மக்களின் எண்ணங்களுக்கு மாறாகச் செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களை வரவேற்கக் காத்திருந்த விளக்குமாறுகளுக்கும், செருப்புகளுக்கும் பயந்து தொகுதிக்குச் செல்லவில்லை. அப்படியே சென்ற ஓரிருவர் ஊர் எல்லையுடன் திரும்பிவிட்டார்கள். அப்படியிருந்தும் அதே நபர்கள் கூவத்தூரில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கூச்சப்படாமல் கேட்கிறார்கள். இரண்டு மூன்றாகப் பிரிந்த, சேர்ந்த, பிரிந்த அ.இ.அ.தி.மு.க. அணியில் தர்மம், நியாயம், ஒழுங்கு, பொதுவாழ்வு நாகரிகம் பற்றிய  கவலை ஒருவருக்குக்கூட இல்லையா?

இரண்டாம்நிலைத் தலைவர் என்று எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ யாரையும் அங்கீகரிக்கவில்லை. தமக்கு மேலும் யாருமில்லை, தமக்கு அடுத்தும் யாருமில்லை என்ற மமதையிலேயே வாழ்ந்தவர்கள் இந்த இருவரும். அதிலும் எந்தக் கேள்வியும் கேட்காத அடிமைக் கூட்டத்தை வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு, கட்சியின் எதிர்காலம் பற்றி எந்த அக்கறையும் இருந்ததில்லை. எனவே அவருக்குப் பிறகு ஆளுமையுடன் கூடிய, அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய தலைவர் ஒருவரும் வரவில்லை. சண்டையெல்லாம் சேர்ந்த பணத்தைப் பங்கு பிரித்துக் கொள்வதற்கும், இனி சேர்க்கவேண்டிய பணத்திற்காகப் பதவியைப் பிடிப்பதற்குமே என்பது மக்கள் பணியா?

இந்த நிலையில் கவர்னரிடமும், ஜனாதிபதியிடமும் மனு கொடுப்பது வெறும் சடங்கு. இதனால் உடனடித் தீர்வு எதுவும் கிடைக்காது. இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும், பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்கான நிர்பந்தத்தை உருவாக்க ஒரேவழி, அத்தனை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதே. அப்போது பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கும். இந்த மாநிலத்தின் அரசியல் மேலும் கேவலப்படாமல் இருக்க அதுதான் ஒரே வழி.

nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer