Friday, September 1, 2017

பரோல் விடுப்பு மூலம் தற்காலிக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நான் நிரந்தரமாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டது.

பரோலில் வந்த பேரறிவாளனை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

பரோல் விடுப்பு மட்டுமல்லாது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அற்புதம்மாள் நேரில் சந்தித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்து அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், ‘எனது மகன் பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவே இங்கு வந்தேன்.

அவரை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உடல்நலக் குறைபாடு காரணமாக எனது மகனுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு பரோல் கிடைப்பதற்கு முயற்சித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

இதுதொடர்பாக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை பேரறிவாளன் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘தற்காலிகமான இந்த சுதந்திரக் காற்றை, நிரந்தரமாக சுவாசிக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

செய்யாத குற்றத்துக்காக இளமையைத் தொலைத்து இருண்ட சிறையில் முடங்கிக் கிடந்தேன்’ என்று அந்த கடிதத்தில் பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார்.

- Vikatan

0 comments :

Post a Comment

 
Toggle Footer