Thursday, September 28, 2017

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், மரணம் அடைந்தது வரை விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நேற்றிரவு அரசாணை வெளியிட்டது. ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையில் தற்போது சசிகலா குடும்பத்தினரை முதல்வர் எடப்பாடி அணியினர் முற்றிலும் ஓரம் கட்டிவிட்டனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி அணியில் இணைந்தனர். அதைதொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், விசாரணை கமிஷனுக்காக நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது அனைத்தும் பொய் என்றும் தெரிவித்தார். இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக சொன்னார். அமைச்சரே, தான் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டதால், ஜெயலலிதா மரணத்தில் மீண்டும் சர்ச்சை அதிகரித்தது.

அடுத்தடுத்து அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இந்த சூழலில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையை சில கட்சிகள் வரவேற்றன. ஆனால் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. அதேநேரத்தில் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், கமிஷன் குறித்தோ, விசாரணைக்கான காலக்கெடு குறித்தோ அரசாணை வெளியிடப்படவில்லை. இதுவும் சர்ச்சையானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், விசாரணை கமிஷன் தொடர்பான அரசாணையை நேற்றிரவு தமிழக அரசு வெளியிட்டது.

அரசாணையில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்.22ம் தேதி, ஜெயலலிதா எந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன, செப்.22 முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை (மரணம் அடைந்த நாள்) அவருக்கு அளிக்கப்பட்ட சிக்சைகள் என்னென்ன என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முழுமையாக விசாரித்து, 3 மாதத்துக்குள் அரசுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer