Tuesday, September 26, 2017

ஈழத்தமிழர்களால் தங்கள் தேசத்தின் மகாத்மாகாந்தி என வர்ணிக்கப்படுபவர் திலீபன்.

ஈழத்தின், யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் அருகிலுள்ள ஊரெழு என்னும் கிராமத்தில் ராசையா என்கிற பள்ளி ஆசிரியரின் கடைசி மகன் பார்த்திபன். சிறு வயதிலேயே தாயை இழந்தவிட்டார். தாய் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் தந்தையும், இரு அண்ணன்களும் தான் திலீபனை வளர்த்தனர்.

மேல்நிலை படிப்பை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து கல்லூரியில் படித்து வளர்ந்தபோது தான், சிங்கள அரசு, தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்க தகுதித்தேர்வு என ஒன்றை கொண்டு வந்தது. அதனை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராட அந்த போராட்டத்தில் ஈடுப்பட்டவர் தான் திலீபன்.

சிங்கள அரசின் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து பயில தொடங்கினார் திலீபன். அப்போது இனப்பிரச்சை பெரியதாக 1980களில் திலீபன் மருத்துவக்கல்வியை இடையில் நிறுத்திவிட்டு விடுதலைப்புலிகளின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அக்குழுவில் இணைந்து போராட துவங்கினார்.

பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்ட திலீபன், யாழ் மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளராக பணியாற்ற துவங்கினார். அந்தக்காலக்கட்டத்தில் இந்தியாவின் அமைதி படை இலங்கை தேசத்தில் இருந்தது. ஈழ மண்ணில் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் மக்களை வதைத்தது, இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தது விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த உண்ணாவிரதம் அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்த உத்தரவிட்டது. அதன்படி, அகிம்சா முறையில் உண்ணாவிரதத்தை, 1987 செப்டெம்பர் 15ஆம் தேதி தொடங்கினார்.

உண்ணாவிரதத்தில் போது, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்தார். அதாவது,

1. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4.  வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

என்பதே உண்ணாவிரதத்தின் கோரிக்கை. இதனை இலங்கையும் – இந்திய அமைதிப்படையும் கண்டுக்கொள்ளவில்லை. இதற்காக கவலைப்படவில்லை திலீபன். தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தார். அவரது உடல் நிலை மோசமானது. ஈழத்தின் மீது அக்கறை கொண்ட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்மென கோரிக்கை விடுத்தார்கள். திலீபன் மறுத்துவிட்டார். தொடர்ச்சியாக 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் இறுதியில் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் போராட்டகளத்திலேயே மரணம் எய்தினார்.

மரணத்துக்கு முன் அவர் உண்ணாவிரத பந்தல் முன் குவிந்திருந்த தன் தேச மக்களுக்கு ஒரு உரையை நிகழ்த்தினார். அதுவே அவரது கடைசி உரையும்மாகும். அது,

என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சி.. யில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இதில் பிழைகள் இருக்கலாம், இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

மரணத்துக்கு பின் விடுதலைப்புலிகள் இயக்கம் அவருக்கு கேணல் என்கிற உயர் பதவியை தந்து துக்கம் அனுசரித்தது. அதோடு, திலீபன் விருப்பபடி, அவரது உடலை யாழப்பாண மருத்துவ கல்லூரிக்கு வழங்கச்சொல்லியிருந்தார். அதன்படி அவரது உடல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

ஈழ மக்கள் இன்றளவும் தங்கள் தேசத்தின் காந்தியாகவே திலீபனை காண்கிறார்கள்.

-ராஜ்ப்ரியன்.
nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer