Saturday, August 12, 2017

தெறி ஹிட்டுக்குப் பிறகு விஜய்யும் அட்லியும் இணையும் படம் – ஏ.ஆர்.ரகுமான் இசை –எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை என ஒவ்வொரு செய்தியிலும் ரசிகர்களின் பல்ஸை ஏற்றிக்கொண்டே வந்த ‘மெர்சல்’ படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியிருக்கிறது.

விஜய்யை சுற்றி அரசியல் அனல் கழன்றுகொண்டேயிருக்கும் வேளையில் நேற்று வெளியான புது போஸ்டரில் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று எழுதப்பட்டிருந்த வரிகள் மேலும் பரபரப்பை கிளப்பியது. தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளனும் என்று சிலரும், நானும் பச்சைத்தமிழன் தான் என்று சிலரும் தமிழ் அடையாளம் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற வரிகள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் விஜயையும் அரசியலையும் இணைத்து ஒரு விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

திருவிழாவில் பாடப்படும் விஜயின் ஓப்பனிங் பாடலாக இது இருக்கலாம். மிகுந்த கவனத்துடன் வரிகள் எழுதப்பட்டிருப்பது கேட்க கேட்க புலனாகிறது. தமிழ், தமிழன் என்பதை சுற்றி மட்டுமே வரிகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் உணர்வை தூண்டும் வரிகளில் ஆங்காங்கே நாயக துதியும் தூவப்படாமல் இல்லை.

‘எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு’

‘ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதான கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்’

என்று கோரஸான நாயக துதியோடு ஆரம்பிக்கும் பாடல்

‘ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே’

என்று வேகம் பிடிக்கிறது.

‘வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கு சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே’

போன்ற வரிகளில் தமிழனை தூக்கிப்பிடிக்கும் வரிகள் சமீபத்திய பரபரப்பான ஜல்லிக்கட்டையும் லேசாக தொட்டுவிட்டுச் செல்கிறது. மெர்சல் படத்தின் முதல் போஸ்டரில் மாடுகள் பின்னணியில் இருப்பதும், மெர்சல் என்ற வார்தையின் டிசைனே மாடு போன்றே உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘நாள்நகர மாற்றங்கள் நேரும்
உன்மொழி சாயும் என்பானே
பார் இளைய தமிழனும் வருவான்
தாய்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே’

போன்ற வரிகள் ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்று பலரும் கொக்கரிக்கும் நேரத்தில் எழுதப்பட்டிருக்கும் நேர்த்தியான பதிலடி வரிகள்.

இறுதியில் ‘தமிழாலே ஒன்னானோம்…மாறாது எந்நாளும்’ என்று தமிழர்களை ஒன்றிணையத் தூண்டும் வரிகளோடு நிறைவடைகிறது பாடல். விதம் விதமான வாத்தியங்கள், ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திற்கும் ஏற்ற பல குரல்கள், துடிதுடிக்கும் இசை, உறியடிக்கும் வரிகள் என கேட்டதும் பிடித்துவிடும் ரகுமானின் பாடல்களில் சேர்கிறது மெர்சலின் முதல் பாடல். பாடலின் ஏற்றஇறக்கம் சட்டென லகான் படப்பாடல் ஒன்றை நினைவுபடுத்திச் செல்கிறது.

நிச்சயம் தியேட்டர் அதிர விஜய் ஆடப்போகிறார். ஆனால் யாரை ஆளப்போகிறார் ? இந்த படத்தின் மூலம் ‘இளைய தளபதி’ என்ற பட்டத்திலிருந்து ‘தளபதி’ என்ற பட்டத்திற்கு மாறியிருக்கிறார் விஜய் என்பது கொசுறுச் செய்தி.

முழு பாடல் வரிகள்

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சு பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாரான்
மீசமுறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு !!

முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம் (வெற்றிமழ…)
ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம் (இனி பொழியட்டுமே..)
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் !!

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே !!

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காத்தில் நம்ம தேன்தமிழ் தெளிப்பான்
இன்னும் உலகம் எழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறும் சிரிக்கும் !!

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் !!

தமிழன்டா எந்நாளும்
சொன்னாலே திமிரேறும்
காத்தோட கலந்தாலும்
அதுதான் உன் அடையாளம் !!

ஹே அன்பக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்த தரிக்கிற ‘ழ’கரத்த சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம் !!

நாள்நகர மாற்றங்கள் நேரும்
உன்மொழி சாயும் என்பானே
பார் இளைய தமிழனும் வருவான்
தாய்தமிழ் தூக்கி நிப்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே !!

முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் !!

நெடுந்தூரம் உன் இசை சேர்க்கும்
பிறைநீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும் !!

முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் !!

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதிய தந்தானே !!

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் !!

தமிழாலே ஒன்னானோம்
மாறாது எந்நாளும் !!

0 comments :

Post a Comment

 
Toggle Footer