Wednesday, August 30, 2017

அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து டிடிவி தினகரனை சந்தித்து நன்றி தெரிவித்த செந்தில், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

அதிமுகவை ஜெயலலிதா மிகக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்கள். அவரது மறைவுக்குப் பின்னர் சசிகலா யார் யாரை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கே வைத்தார். அதிலே சில சகுனிகள் இருந்தார்கள். ஓ.பி.எஸ். அணியில் சில சகுனிகள், இ.பி.எஸ். அணியில் சில சகுனிகள் இருந்தார்கள். இப்படி இந்தக் கட்சியை கோமா ஸ்டேஜில் கொண்டுவந்துவிட்டார்கள். அதற்கு நல்ல டாக்டர் வேணும். அந்த டாக்டர் தினகரன்தான்.

இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மக்கள் கண்ணுக்கு தெரிகிறது. ஜெயலலிதா சொன்னார்கள் இந்த கட்சி 100 ஆண்டுகளையும் தாண்டி இருக்க வேண்டும் என்று. உண்மைதான் இருக்கும். ஆனா இப்படி நீங்க நடந்துகிட்டீங்கன்னா. நீங்க அந்தப் பக்கம், இவுங்க இந்தப் பக்கம், இது தர்ம யுத்தம், அந்த யுத்தம், இந்த யுத்தம். இதுதான் தர்ம யுத்தமா. பணமும், பதவியும் தான் தர்ம யுத்தமா? எத்தனை எம்எல்ஏக்கள் இருக்காங்க. அவர்களக்கு பதவி கொடுக்கலாமே. நீங்களே இருக்கணுமா.

கட்சிக்காரங்களுக்கு ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் தினகரன் கூறினார். நானும், ஐசரி வேலனும் ஒன்றாகத்தான் தலைவர் காலத்தில் சேர்ந்தோம். அதற்கு பின்னர் சேவல் சின்னத்துக்காக திருச்சி ஒத்தக்கடையில் பேசும்போது, அந்த மேடையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். யாரும் காணும். நான் அப்ப பார்த்தது திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன், கோவை தம்பி, கருப்புசாமி பாண்டியன், செங்கோட்டையன் ஆகியோரைத்தான்.

நேற்று வந்தவன் சொல்லியிருக்கான் செந்திலுக்கு பதவியான்னு. குமாரு நீ எப்ப வந்த. கலியப்பெருமாள் மூலம் காகா பிடிச்சு எம்பியான நீ. என் வாழ்க்கை வரலாறு என்ன தெரியுமா உனக்கு. மேடையில வேகமா பேசும்போதுகூட ஜெயலலிதா என்ன சொல்லுவாங்க தெரியுமா. கொஞ்சம் குறைச்சுக்குங்கன்னு சொல்லுவாங்க. முதுகளத்தூர்ல சீட் கேட்டேன். கீர்த்தி முனுசாமிக்கு கொடுத்துவிட்டேன். ஆனா பாருங்க இன்று அவர் விசுவாசம் இல்லாம அங்க போய் சேர்ந்துவிட்டார். அவர்களுக்கு கட்சி முக்கியமில்லை. பணம்தான் முக்கியம்.

நான் இந்தக் கட்சியில் இருந்து 5 பைசா கூட சம்பாதிக்கவில்லை. என் மகன் திருமணத்திற்காக தாம்பரம் அருகில் இருந்த 5 ஏக்கர் நிலத்தை விற்றேன். நான் என்றைக்கும் ஜெயலலிதாவிடம் போய் கடன் இருக்கிறது என்று நின்றதில்லை. புரட்சித் தலைவருக்காக உழைத்தேன். அடுத்து ஜெயலலிதாவுக்காக உழைத்தேன். இப்பவும் சொல்கிறேன். ஒன்றுமையாக இருந்தால் கட்சி நன்றாக இருக்கும். இல்லையென்றால் நன்றாக இருக்காது. இந்த கட்சி இவர்கள் இரண்டு பேரால் வீணாகிறது. மற்ற மந்திரிகளை சொல்ல விரும்பவில்லை.

வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா. நீங்க இரண்டு பேரும் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று வாருங்கள். நாங்கள் உங்களை முதல் அமைச்சராக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் முதலமைச்சராக ஏற்றுக்கொண்டது சசிகலாவைத்தான். சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் நீங்கள். அதனால்தான் இப்போது முதல் அமைச்சராக உள்ளீர்கள். இவ்வாறு பேசினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer