Monday, August 14, 2017

சினிமா என்பது சிலருக்கு வணிக இலக்கு. சிலருக்கு அது ஒரு கலைக்  கருவி. அதைப் பயன்படுத்தி நினைத்ததை வரைய முடியும். இரண்டும் தவறல்ல. வெற்றி தோல்வி என்பது பார்ப்பவர்களை திருப்திப்  படுத்தினால் தான் சாத்தியம். ராம், சினிமாவை இந்த முறை ஒரு கருவியாக, மிகை  உணர்ச்சிவசப்படல் இல்லாமல் சுலபமாக பயன்படுத்தியிருக்கிறார். நல்ல படம் என்றால் இறுதியில் பெரும் சோகம் நிகழ வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி வந்து, நிகழ் காலத்தில் காதலர்களுக்கிடையேயான உறவுப் பிரச்சனைகளை உள்ளபடி, இடையிடையே முக்கியமான சமூக பிரச்சனைகளையும் தன் எள்ளல் 'வாய்ஸ்-ஓவரால்' தொட்டுச்  சென்றிருக்கிறார் இயக்குனர் ராம்.

எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து, சென்னை தரமணியில் ஒரு 'கால் சென்டரில்' வேலை பார்க்கும் வசந்த் ரவி, ஒரு 'மென்பொருள்' துறை பெண்ணை காதல் செய்து தோல்வியடைந்து விரக்தியில் சுற்றிக்கொண்டிருக்கிறார். தன் கணவனின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவன் தன் வழியில் போக, வழிவிட்டு தவறான பார்வைகளையும் அனுகல்களையும் எதிர்கொள்ளும்  தனி தாயாய் வாழ்கிறார், ஆண்ட்ரியா. இவர்கள் சந்தித்து, நட்பாகி, காதலாகி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் 'தரமணி'. இருவருக்கிடையிலான பிரச்சனைகளாக மட்டும் பேசாமல், அவர்களின் தொழில், வாழ்விடம், சமூக மாற்றங்கள்  எல்லாம் தனி மனித வாழ்க்கையை எப்படி  பாதிக்கிறது என்பதை பேசியிருக்கும் ராம்,  தான் வேறுபட்டவன் என்பதை தன் பாணியில் நிரூபித்திருக்கிறார்.

ஆண்ட்ரியா, அத்தனை அழகாக, அனாயசமாக தன்  கதாபாத்திரத்தை சுமந்திருக்கிறார். ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக அவர் பேச்சிலிருந்து, ஸ்டைலான நடை உடை அனைத்தும் அத்தனை பொருத்தம். அதையெல்லாம் தாண்டி, தன் தாய் தன் மகனிடம் தன்னைப் பற்றி சொன்ன கெட்ட வார்த்தையை மகன் தன்னிடம் கேட்கும்போது ஏற்படும் உணர்வு, இடைவேளைக்கு முன் இருவருக்கும் நடக்கும் சண்டை என ஆச்சரிய ஆண்ட்ரியா. ராமின் நாயகர்கள் பொருளாதார பொறுப்பை சுமக்காத வழிப்போக்கர்கள், நல்ல ஆங்கிலம் பேசுபவர்கள். தரமணியின்  வசந்த் ரவி ஒரு சிறப்பான அறிமுகம். சந்தேகம், பதற்றம், குற்ற உணர்வு என அத்தனையும் சிறப்பாக வெளிப்படுகிறது. அவரது குரல் ஒரு பெரிய பிளஸ். இவர்களைத் தாண்டி, அஞ்சலி, அந்த குட்டிப் பையன், அழகம்பெருமாள், JSK, ஆண்ட்ரியாவின் 'பாஸ்' ஆக நடித்தவர், என ஒரே ஒரு காட்சியில் நடித்தவர்களும் கூட சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள், சிறப்பாக நடித்திருக்கிறார்கள். உண்மையான  யுவன், உண்மையில் இப்பொழுது தான் திரும்பியிருக்கிறார். பின்னணி இசையும் பாடலும் கதையின் ஆன்மாவை நம்மிடம் சேர்கின்றன. .நா.முத்துக்குமாரின் இழப்பை இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் உணர்த்துகிறது. OMRஇன் பழக்கப்படாத பகுதிகளையும் அந்த அபார்ட்மெண்ட்டின் 'ஏரியல்' காட்சிகளையும், ஊரிலிருந்து அந்த சமூகம் பிரிந்திருப்பதையும், கதையின் அலைதலையும் ராமின் கண்களிலிருந்து படமாக்கியிருக்கிறார் 'தேனி' ஈஸ்வர்.          

அடிக்கடி வருவது போல் தோன்றினாலும், ராமின் குரல் ஒவ்வொரு முறை பேசும் விஷயங்களும் கைதட்டல் பெறுகின்றன. ஒரு காட்சி முடியவேண்டிய இடம், வசனம் முடியும் இடம் அல்ல என்று மிக அழகாக நிறுவியிருக்கிறார் ராம். தாய் திட்டியதை குழந்தை வந்து சொல்லும் காட்சியும், இடைவேளையில் வசந்துடன் சண்டை  ஏற்படும் காட்சியும் முடியும் இடங்கள் மிகச்சிறப்பு. இத்தனை நல்ல விஷயங்கள் இருக்கும் படத்தில் உறுத்துவது இரண்டு விஷயங்கள்.  படத்தில் இருக்கும் ஜோடிகளில் எல்லோருமே குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி  இல்லாதவர்களாகவும், ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் உடனே சபலப்படுபவர்களாகவுமே இருக்கிறார்கள். சமூகத்தில் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா? அடுத்து, எத்தனையோ முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், பெரிய பின்புலம் இல்லாத படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பையும் உயர்வையும் மென்பொருள் நிறுவனங்கள் அளித்திருக்கின்றன என்பது நம் கண் முன் பார்ப்பது. அப்படியிருக்க, அந்த நிறுவனங்களும், அதில் வேலை செய்பவர்கள் அனைவருமே எதற்கோ   அடிமைப்பட்டவர்கள் போன்றே பேசப்பட்டிருக்கும் தொனி. இது ராமின் பார்வை, படைப்பு. இருந்தாலும் இந்த இரு விஷயங்களும் பொதுமைப்படுத்தப்பட்டு இருப்பது நெருடல். இந்த சிறு குறைகளைத் தாண்டி பெரும் அனுபவம் தருகிறது தரமணி.

தரமான, தனித்துவம் வாய்ந்த மணி...தரமணி!

0 comments :

Post a Comment

 
Toggle Footer