Friday, August 4, 2017

தற்போது விக்ரம் வேதா திரைப்படம் எந்த அளவுக்கு  பேசப்படுகிறதோ, அதே அளவு படத்தின் வசனங்களும் பாராட்டி பேசப்படுகிறது. படத்தில் இளம் காவலாளியாக வரக்கூடிய மணிகண்டன் தான் விக்ரம் வேதா படத்தின் வசனகர்த்தாவும் கூட.

மணிகண்டன், நரை எழுதும் சுயசரிதம் என்றொரு படம் இயக்கியிருக்கிறார். அந்த படத்திற்காக பல சர்வதேச விருதுகளும் அவர் பெற்றிருக்கிறார். பிரபல வானொலி  நிலையத்தில் ரேடியோ ஜாக்கியாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மற்றும் திரைப்படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்திருக்கிறார். பன்முக கலைஞராக விளங்கக்கூடிய நடிகர் மணிகண்டன் தற்போது பா.ரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துவருகிறார்.

தன்னைப் பற்றிப் பேசிய அவர்‘ரஜினி ரசிகராக இருந்து அவருடன் அருகில் நின்று நடிக்கும் பொழுது கனவில் நிகழ்வது போல் இருந்தது. ஒப்புப்போலிக்கலை ( Mimicry) தான் என்னுடைய முதல் அடித்தளம். பின்னர் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் ரன்னராக வந்தேன். அதன்பிறகு என்னுடைய குரல்தான் என் பலம் என்று முடிவு செய்தேன். அதனால் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டப்பிங் வேலைசெய்து என் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினேன்.

இந்தியா பாகிஸ்தான், நேற்று இன்று நாளை போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தேன். நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும் படத்தில் அண்ணன் விஜய் சேதுபதியின் நண்பராக முழுநீள துணை கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்பிறகு விஜய் சேதுபதி இயக்குநர்கள் புஸ்கர் காயத்ரியிடம் அறிமுகம் செய்துவைத்தார். விக்ரம் வேதா படத்தில் வசனம் எழுத கேட்டேன். பின்னர் படம் முழுவதும் வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது’ என்றார் உற்சாகமாக.

காலா படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி கேட்டபோது, ‘ஒரு நாள் பா.ரஞ்சித்திடம் இருந்து அழைப்பு வந்தது என்னுடைய youtube தொலைக்காட்சி "சரி பேசி பாப்போம்" அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார். பின்னர் நடிப்பு தேர்வுக்கு அழைத்தார்கள். இறுதியில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer