தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிகளின் இணைப்பு (நேற்று வெள்ளிக்கிழமை இரவு) கடைசி நேரத்தில் தள்ளிப் போனது.
அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னையில் தனித் தனியாக நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். மாலை 5 மணியளவில் தொடங்கிய ஆலோசனை சுமார், 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. ஆலோசனையில் நல்ல முடிவு எட்டப்பட்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அணிகளின் இணைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால், ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுடன், அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் நேற்று மாலை முதலே ஜெயலலிதா நினைவிடத்தில் குவியத்தொடங்கினர். இதே போல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முடிவுக்கு வருவதை யூகித்த அ.தி.மு.க. தொண்டர்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இரவு 09.45 மணியையும் தாண்டி ஆலோசனையில் இழுபறி நீடித்த நிலையில், மெரினாவுக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்களும் தொண்டர்களும் கலையத் தொடங்கினர். சுமார், 9.50 மணியளவில் ஓபிஎஸ் அணியினரின் செய்தியாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.
ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த நிர்வாகிகள் கட்சி மற்றும் ஆட்சியில் முக்கியப் பதவிகளை கேட்டு தொடர் நெருக்கடி கொடுத்ததால் இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இணைப்பு குறித்த இறுதி முடிவை ஓ.பன்னீர்செல்வமே எடுப்பார் என மதுசூதனன் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் உள்ள எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்தால் அது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும். இவர்கள் இருவரும் இணைந்து கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் செய்ய உள்ளதாக எதிர்பார்ப்புகள் இருந்தது. அ.தி.மு.க. அணிகளின் இணைப்பை ஒரு வரலாற்று நிகழ்வாகவே அரசியல் விமர்சகர்கள் பார்த்தார்கள். இதனால் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பெரும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவியது. ஆனால் அதிமுக அணிகள் இணையாததால் தொண்டர்களுக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
(நன்றி- நியூஸ்7)
Saturday, August 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment