Wednesday, August 30, 2017

'தேரா ஸச்சா சவுதா' அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத்  ராம் ரஹீம் சிங்கிற்கு   20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஜெகதீப் சிங், குர்மீத்தை குற்றவாளியாக அறிவித்தார். அவருக்கான தண்டனை 28-ம் தேதி அறிவிக்கபடும் என நீதிபதி கூறினார். இதையடுத்து இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.  பக்தியைப் பயன்படுத்தி பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டு, பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு இந்த தண்டனை கிடைக்கக் காரணம்,   2002 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாயிக்கும், பஞ்சாப் - ஹரியானா  உயர்நீதிமன்றங்களுக்கும், இன்னும் சில அரசு துறைகளுக்கும் அனுப்பப்பட்ட ஒரு மொட்டைக் கடிதமே... 2002 ஆம் ஆண்டு,  மே 5 ஆம் தேதி கிடைத்த இந்தக் கடிதத்தின் அடிப்படையில்   உயர்நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

கடிதத்தின் மொழிபெயர்ப்பு  

ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய்
பிரதமர்
புதுடெல்லி

நான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண். கடந்த ஐந்து வருடங்களாக 'தேரா ஸச்சா சவுதா' அமைப்பில் சிஷ்யையாக சேவையாற்றி வருகிறேன். என்னைப் போல் இங்கு நூற்றுக்கணக்கான பெண்கள், தினமும் பதினெட்டு மணிநேரம் பணியாற்றுகின்றனர்.

இங்கு நாங்கள் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுகிறோம். 'தேரா மஹராஜ் குர்மீத் சிங்க்' பெண்களை கற்பழிக்கிறார். நான் ஒரு பட்டதாரி. என் குடும்பத்தினர் தான் என்னை இங்கு சேர்த்தனர். அவர்கள் குர்மீத் சிங்கை கண்மூடித்தனமாக நம்புகின்றனர். நான் இங்கு சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள், இரவு பத்து மணிக்கு, இன்னொரு மூத்த சிஷ்யை என்னிடம் வந்து, தேரா மஹராஜ் என்னை அழைப்பாதாகச் சொன்னார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். என்னை சந்திக்க அவரே அழைத்திருப்பது எனக்கு பெருமையாக இருந்தது. படியேறி, அவரது அறைக்குச் சென்றேன். உள்ளே சென்ற நான், அதிர்ச்சி அடைந்தேன். அங்கு, ஒரு கையில் டிவி ரிமோட்டுடன் அமர்ந்து 'நீலப் படம்' பார்த்துக்கொண்டிருந்தார் குர்மீத் சிங். அவருக்கருகில் இருந்த தலையணைக்குக் கீழாக ஒரு கைத்துப்பாக்கி இருந்தது.   இதனைப் பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு மயக்கம் வருவது போல் ஆனது. அதுவரை என் ஆன்மிக குருவாக, கடவுளாக எண்ணியிருந்த மஹராஜ் இப்படியிருப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

என்னைத் தன் அருகில் உட்கார வைத்தார். என்னைத் தனக்கு நெருக்கமான சிஷ்யையாக உணருவதால் இந்த வாய்ப்பை எனக்குத் தந்ததாகக் கூறினார். தேராவில் இணைந்த பொழுதே என் உடல், பொருள், ஆன்மா அனைத்தும் தனக்கு அர்பணிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார். நான் மறுத்து, தவிர்த்த போது, "நான் கடவுள் என்பதில் துளி சந்தேகமும் இல்லை", என்று கூறினார்.

"கடவுள், இப்படிப்பட்ட காரியத்தை செய்வாரா?", என்று நான் கேட்ட பொழுது, "இது புதிதல்ல, கிருஷ்ண பகவானுக்கு 360 கோபியர்கள் இருந்தனர். அவரை நாம் வழிபடவில்லையா?" என்று கேட்டார்.

மேலும், 'இப்பொழுதே என்னால் உன்னை சுட்டுக் கொன்று புதைத்துவிட்டு எந்தத் தடமும் இல்லாமல் செய்ய முடியும். உன் குடும்பத்தினர் என்னை முழுமையாக நம்புகின்றனர். எனக்கெதிராக அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்களது அரசாங்க பணியிலிருந்து அவர்களைத் துரத்த என்னால் முடியும். ஏன், அவர்களையும் கொன்று, உன் குடும்பத்தையே அழிக்க என்னால் முடியும். ஏற்கனவே 'தேரா'வின் மேலாளர் 'ஃபக்கீர் சந்த்'தை கொன்று மறைத்ததைப் போல இதையும் செய்ய முடியும்.    உனக்கே தெரியும், அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் என்னை வழிபடுகின்றனர். 'தேரா'வின் ஒரு நாள் வருமானம் கோடியைத் தாண்டும். அதை வைத்து என்னால் யாரையும் விலைக்கு வாங்க முடியும்' என்று மிரட்டினார்.

தேரா ஸச்சா சவுதா

அன்றிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக என்னைப் பாலியல் ரீதியாக பயன்படுத்தி வருகிறார். 25-30 நாட்களுக்கொரு தடவை  என் முறை வரும். அங்கிருக்கும் பலரையும் பல வருடங்களாக அவர் பயன்படுத்தி வருகிறார். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 35-40 வயதாகிவிட்டது. அவர்களுக்கு இனி அங்கிருப்பதைத் தவிர வாழ்க்கையில்  வேறு வழியில்லை.

அவர்கள் அனைவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள். குடும்பத்தினரின் முட்டாள்த்தனமான நம்பிக்கையால் அவர்கள் நரகத்தில் வாழ்கின்றனர். நாங்கள் வெள்ளை ஆடை உடுத்தி, தலையில் வெள்ளைத் துணி கட்டியிருப்போம். குர்மீத் சிங்கின் கட்டளைப்படி நாங்கள் ஆண்களை நிமிர்ந்து பார்ப்பதில்லை, ஐந்து அடி தள்ளி நின்றே பேசுவோம். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் 'தேவி'களைப் போல தெரிகிறோம். ஆனால் நாங்கள் தேவதாசி வாழக்கையை வாழ்கிறோம். இந்தக் கொடுமைகளை அனுபவித்த பலரும் பயத்தினால் மௌனமாய் இருக்கின்றனர். மீறி, இது பற்றிப் பேசிய ஒரு பெண் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டுக்குச் சென்றாள். பயத்தினால் அவளின் குடும்பத்தினரும் இதுபற்றிப்  பேசவில்லை. அனைவரும் இப்படித்தான்.

என் பெயரை இங்கு குறிப்பிட்டால், என்னைக் கொன்று விடுவார்கள். அரசு, முறையாக விசாரித்தால், இங்குள்ளவர்கள் பலரும் உண்மையைச் சொல்லுவார்கள். எங்களுக்கு பாதுகாப்பளித்தால், இங்கு நடக்கும் கொடுமைகளை வெளிப்படுத்துவோம். எங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினால், நாங்கள் கற்பழிக்கப்பட்டது வெளிவரும். 'தேரா ஸச்சா சவுதா' குர்மீத் ராம் ரஹீம் சிங், எங்கள் வாழ்க்கையை நாசமாக்கியது வெளிவரும்.

தங்கள் நம்பிக்கைக்குரிய,
நரகத்தில் தள்ளப்பட்ட அப்பாவிப் பெண்

0 comments :

Post a Comment

 
Toggle Footer