Friday, August 4, 2017

அர்ஜுன் !!! நூற்றி ஐம்பது படங்கள் நடித்துவிட்டாரா என்று ஒரு ஆச்சரியம். அதே நேரம், தன் வயதுடைய சமகால நடிகர்கள் பலர், 'இவர் இன்னும் ஹீரோவாவே தான் நடிக்கணுமா' என்ற  எண்ணத்தை ஏற்படுத்தி பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் அந்த எண்ணத்தை ஏற்படுத்தாமல் இருப்பவர். எந்த கட்டத்திலும் இவருக்கு தொடர் வெற்றிகள் அமைந்ததில்லை. நான்கு அல்லது ஐந்து படங்களுக்கு ஒன்று வெற்றியாகும், மிகப்பெரிய வெற்றியாகும்.  தன் தோற்றம், உழைப்பு, சண்டைக்காட்சிகளில் தனி பாணி, வசன உச்சரிப்பு  என தன்னை ரசிக்க பல விஷயங்களை இன்று வரை தொடர்ந்து  வைத்திருக்கிறார். நிபுணன், அர்ஜுனுக்கு நூற்றி ஐம்பதாவது படம். வாழ்த்துகள் !!!

நிபுணன்...தொடர் கொலைகள் செய்து, ஒவ்வொரு கொலைக்கு பின்னும் அடுத்த கொலை யாரை செய்யப் போகின்றான் என்று ஒரு 'க்ளூ' கொடுத்து செல்லும் கொலை நிபுணனை, துப்பறியும் போலீஸ் நிபுணன் கதை. துப்பறியும் விதமும் கொலைகாரனை அடையும் வரையும் படத்தில் சுவாரசியம். இது போன்ற கதைகளில், கொலைகாரன் யார் என்று படம் பார்க்கும் ரசிகர்கள் யோசிக்க முடியாத வகையில் அமைக்க  வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த கட்டாயமே சில சமயங்களில் படத்திற்கு சோதனையாக அமைந்துவிடுகிறது. பயங்கர நுண்ணறிவாளியாக கட்டமைக்கப்படும் வில்லன் கதாப்பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின், அந்த பிம்பம் சரிந்துவிடுகிறது. படம் முழுவதும் அர்ஜுனுக்கு மட்டுமே முக்கிய வேலைகள் தரப்பட்டு இருப்பதால், பிரசன்னா, வரலக்ஷ்மி, வைபவ், ஸ்ருதி ஹரிஹரன்  என முக்கிய நடிகர்களுக்கு கூட முக்கியத்துவம் குறைந்தே இருக்கிறது. அர்ஜுனின் குடும்பப் பகுதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இயக்குனர் அருண் வைத்தியநாதன், 'அச்சமுண்டு அச்சமுண்டு'வில் கவனத்தை ஈர்த்தவர். நல்ல சுவாரசியமான கருக்களை தேர்ந்தெடுக்கும் அவர், முழுமையான சிறப்பான படமாக மாற்ற திரைக்கதையில் இன்னும் சில சிறு, சிறு மாற்றங்களும் முயற்சிகளும் தான்  தேவை. ஆனாலும் மோசமான அல்லது சாதாரணமான ஒரு படத்தைத் தந்துவிடவில்லை அவர். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தை 'ஸ்டைலிஷ்' ஆக்கியுள்ளது. சில காட்சிகளின் தரத்தில் மட்டும் வித்தியாசம் தெரிகிறது. என்ன காரணமோ? நவீனின் பின்னணி இசை வித்தியாசமாக, நன்றாக இருந்தாலும், சில இடங்களில்  இரைச்சலை குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சதிஷ் சூர்யாவின் படத்தொகுப்பு, படத்தின் இறுதித் தோற்றத்தை மெருகேற்றியிருக்கிறது. உள்ளடக்கத்திலும் கொஞ்சம் வெட்டியிருக்கலாம்.

நிபுணன் 'எக்ஸைட்' ஆக்கவில்லை, அதே நேரம் ஏமாற்றவில்லை !!!

0 comments :

Post a Comment

 
Toggle Footer