Wednesday, August 30, 2017

தன்னை கடவுளாக நினைத்து வணங்கும் பெண்களையே தனது இச்சைக்கு இரையாக்கிய ஒரு சாமியாருக்கு ஆதரவாக மூன்று மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.

வட இந்தியாவில்தான் இந்த கொடுமைகள் சாத்தியம். அதேசமயம் லட்சக்கணக்கான மக்களை, பக்தி வேஷத்தால் ஏமாற்றி, தனி அரசாங்கமே நடத்தி வந்தாலும், உண்மையான முகம் தோலுரிக்கப்படும்போது உரிய தண்டனை கிடைத்தே தீரும் என்பதற்கு, சரியான உதாரணம் குர்மீத் ராம் ரஹீம் சிங்.

யார் இந்த கற்பழிப்புச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்? டேரா சச்சா சவ்தா என்ற அமைப்புக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

பலுசிஸ்தானைச் சேர்ந்த மஸ்தானா ஜி மகராஜ் என்பவரால் 1948ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த டேரா சச்சா சவ்தா அமைப்பு.

1919ல் இந்த அமைப்பை ஷா சத்னம் சிங் என்பவர் இந்த அமைப்பின் தலைவராக வந்தார். இவருடைய காலத்தில்தான் 1990 ஆம் ஆண்டு தலைமை பீடத்துக்கு அறிமுகமானார் குர்மீத் ராம் ரஹீம் சிங்.

டேரா சச்சா சவ்தா என்ற அந்தச் சங்கத்தை கையில் வைத்துக்கொண்டு தன்னை முன்னிலைப்படுத்தி ஆதரவாளர்களின் எண்ணிக்கையை மளமளவென்று அதிகரித்தார்.

1999ம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தன்னுடைய பக்தையாக இருந்த பெண்களை கற்பழித்ததாக இவர் மீது புகார்கள் வந்தன.

இவருடைய ஆசிரமத்தில் நடக்கும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை எழுதிய பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்ததாகவும்,

ஆசிரம மேலாளர் ஒருவரை கொலை செய்ததாகவும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2002ம் ஆண்டு இவருடைய ஆசிரமத்தில் இருந்த இன்னொரு பெண் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.

தன்னையும் தனது மற்ற தோழிகளையும் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதாக அந்தப் பெண் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சமயத்தில் குர்மீத், காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார்.

2007ம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தார்.

அவர்மீது கற்பழிப்பு, கொலைக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஓட்டுக்காக இவரது ஆதரவை பெற்றது காங்கிரஸ்.

தன்மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பிறகு, இவர்  பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி தன்னை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இவர் நடத்திய ரத்ததான முகாம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

2014ஆம் ஆண்டு இவர் பாஜகவை ஆதரித்தார். ஹரியானா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். இவருடன் மோடியும் பாஜக தலைவர்களும் நெருக்கமாக ஆனார்கள்.

தூய்மைத் திட்டத்தில் அதிகமாக பங்கெடுத்தார். பஞ்சாப், டெல்லி, பிகார் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் பாஜகவை ஆதரித்து தீவிரமாக செயல்பட்டார்.

1லட்சத்து 50 ஆயிரத்து 9 எண்ணெய் விளக்குகளை ஏற்றுவது, 77 ஆயிரத்து 723 கிலோ காய்கறிகளைக் கொண்டு 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் அலங்கார கோலம் உருவாக்கியது என பல நிகழ்வுகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

ஹிண்ட் கா நபாக் கோ ஜவாப் என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கி, இசையமைத்து என 43 விதமான பங்களிப்பு செய்திருக்கிறார். இதற்காக அந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்சில் இடம்பெற்றுள்ளது.

தன்னை கடவுளாக சித்தரித்து 5 திரைப்படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரேஞ்ச்சுக்கு தன்னை பில்டப் செய்து கொள்வது இவருடைய வழக்கம்.

பெண்களுக்கான கல்லூரியை 6 நாட்களிலும், மாணவிகளுக்கான விடுதியை 42 நாட்களிலும், 2 லட்சம் சதுர அடி பரப்புள்ள பெரிய அரங்கத்தை 35 நாட்களிலும், 175 படுக்கை வசிதியுள்ள மருத்துவமனையை 17 நாட்களிலும், ஒரு ஆசிரமத்தை 5 நாட்களிலும் கட்டி முடித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.

கடவுளின் அவதாரமாக கருதப்படும் இந்தச் சாமியார் தன்மீது கற்பழிப்புப் புகார் வராமல் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

ஆடம்பர சாமியாராக கருதப்படும் குர்மீ்த ராம் ரஹீம் சிங் இரண்டு பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என்று பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து, இவருடைய ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 350க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஹரியானா பாஜக அரசு இவருக்கு ஆதரவளிப்பதாக உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு குர்மீத் சாமியாருக்கு சில சலுகைகள் பகிரங்கமாக வழங்கப்பட்டன.

இந்த நிலையில்தான் சாமியாருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

28 ஆம் தேதி திங்கள் கிழமை நீதிபதியே சிறைக்கு வந்து குர்மீத்துக்கு தண்டனை அறிவித்தார். அவருக்கு இரண்டு கற்பழிப்பு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது தன்னை மன்னிக்கும்படி குர்மீத் கண்ணீர் விட்டு கதறியதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தாலும் கருணையற்ற கற்பழிப்புச் சாமியாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்தச் சாமியாரின் ஆசிரமத்தை ராணுவம் முடக்கியுள்ள நிலையில், இவர் மீதான கொலைக்குற்றங்கள் மீதான விசாரணை நீடிக்கிறது.

அவையும் நிரூபிக்கப்பட்டால் சிறையிலேயே சமாதி ஆவாரா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer