Friday, August 11, 2017

வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கோரவில்லை. ரவி கருணாநாயக்க தானாக விரும்பியே இராஜினாமா செய்தார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கைகளை துரிதமாக பூர்த்தி செய்யும் சட்ட மா அதிபர் திணைக்களம், கடந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் தொடர்பான கோப்புகளை நீண்டகாலம் தாமதப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் திருடர்கள் வெளியில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விசாரணை முடிவடைவதற்கு முன்னர் ஊடகங்களும் எதிர்க்கட்சியும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை குற்றவாளியாக்கியிருந்தன. இந்த நிலையிலே அரசாங்கத்திற்கும் கட்சிக்கும் வரும் அழுத்தத்தை தடுப்பதற்காக ஏதும் முடிவு எடுக்க உத்தேசிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் பதவி விலகும் உயர்ந்த முடிவு எமது ஆட்சியில் மட்டும் தான் நடந்துள்ளது. முன்பு அமைச்சர் திலக் மாரப்பன விலகினார். அதற்காக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் சகலரும் பதவி விலகத் தேவையில்லை. திறைசேரி முறி தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் நான் அமைச்சரவையில் சில விடயங்களை முன்வைத்தேன். சிக்கலான விடயமொன்று தொடர்பிலே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

சர்வதேச பொருளாதார நிபுணர்களை அழைத்தாவது இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். திறைசேரி முறி மோசடி குறித்த உண்மையான அறிக்கை வெளிவர வேண்டும்.

சட்ட மா அதிபர் திணைக்களம் எமது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒருவிதமாகவும் கடந்த ஆட்சியில் இருந்தோர் தொடர்பில் வேறுவிதமாகவும் செயற்படுகிறது. அங்கு 82 மோசடிகள் தொடர்பான கோப்புகள் முடங்கிக் கிடக்கின்றன. கோதாபாய ராஜபக்ஷவின் கையொப்பத்தை உறுதி செய்ய ஒரு வருடகாலமாக இவர்களால் முடியவில்லை. சட்டமா அதிபர் திணைக்களம் ஏன் கடந்த ஆட்சியில் நடந்த மோசடிகளை தேட இவ்வளவு தாமதிக்கிறது.

சட்ட மா அதிபர் திணைக்கள பிரதிநிதியென்பது அரச பிரதிநிதியாவார். சாட்சியம் வழங்க வரும் அரசாங்கத்தின் பிரதிநிதியான அமைச்சர் ஒருவரை சட்டமா திணைக்கள அதிகாரிகள் விசாரிக்கும் விதத்தை அனுமதிக்க முடியாது. சட்டமா அதிபரின் பிரதிநிதி இவ்வாறு ஆவேசமாக விசாரிக்கையில் ஆணையாளர்கள் தடுத்தார்கள்.

எமக்கு தேவையானால் கடந்த அரசாங்கம் போன்று எந்த குற்றச்சாட்டு குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தாதிருந்திருக்கலாம், திறைசேரி முறி மோசடி தொடர்பில் பல்வேறு விசாரணைகள் நடந்தாலும் அவை எதிலும் அரசாங்கம் தலையீடு செய்யவில்லை. எந்த அரசாங்கத்தில் மோசடிகள் நடந்தாலும் விசாரணை நடத்தப்படவேண்டும். கடந்த அரசாங்கம் எதிர்கால அரசாங்கம் என்பன தொடர்பிலும் இது செல்லுபடியாகும்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான விசாரணையை சட்ட மா அதிபர் திணைக்களம் ஒன்பது நாளில் நிறைவு செய்தது. சதுர சேனாரத்னவுக்கு எதிரான விசாரணையை இரண்டு நாளில் பூர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் கடந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் குறித்து விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்யுமாறு கோரியதாக தெரிவிக்கப்படும் தகவலை அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி நிராகரித்திருந்தார். ஒரு அமைச்சரே இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் அவரை 2 வாரமாக தான் சந்திக்கவில்லை என ஜனாதிபதி விளக்கினார். புதன் கிழமை தான் ஜனாதிபதியும் பிரதமரும் அவரை சந்தித்தனர். அதன்போது தான் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer