Friday, August 18, 2017

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதுடன் இக்கூட்டத்திலேயே மேற்படி யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான வழக்குகள் தாமதமாவது மற்றும் அமைச்சர்கள் தமக்கான கூட்டுப் பொறுப்புக்களை மீறி செயற்படுவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஆஸ்ர மாரசிங்க முன்வைத்ததுடன் அதனை பாராளுமன்ற உறுப்பினர் அநுர சித்மி ஜயரத்ன வழிமொழிந்தார். ஐந்து குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் எதிர்ப்புகள் இருப்பின், அதனை முன்வைக்குமாறு இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டபோதும் எவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

“அம்பாந்தோட்டை துறைமுகத்தை மீளப்பெற்றுக்கொள்வதில் பின்வாங்கப்போவதில்லை என விஜயதாச ராஜக்ஷ கூறியிருந்தமை தேசியப் பத்திரிகைகளில் பிரதான செய்தியாக கடந்த 10ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இதனை நிவர்த்தி செய்யும் செய்தியை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வரை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சரான ரவீந்திர சமரவீர ஆகியோரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கூற்று தொடர்பில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், ஊடகங்களில் பிரசுரமானது போல் அம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக தாம் எதனையும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு கூறினாலும், வழக்குகள் தாமதமாவதற்கு தாம் பொறுப்பில்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்கள நடவடிக்கைகளில் தாம் தலையிட முடியாது என்றும் இதன்போது அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டிருந்தன. 'நீதி அமைச்சராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமது பொறுப்பை முறையேற்றவில்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கையில் குறிப்பிட்டபடி ஊழல் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு அவரால் முடியாமல் போனது, குற்றங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை மீள மக்களுக்கு வழங்கும் வகையில் தேவையான சட்டத்தை கொண்டுவருவதற்கு அவரால் முடியாது போயுள்ளது. குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணை பெரும் தாமதமாகியுள்ள நிலையில் நீதியை நிலைநாட்ட முடியமலுள்ளது. இதனால் நாட்டு மக்கள் நீதி அமைச்சர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அமைச்சரின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் மீதும் ஐக்கிய தேசியக் கட்சி மீதும் மக்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர் என்பதே அமைச்சர மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer