Sunday, August 13, 2017

இந்திய- சீன எல்லைப்பகுதியில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கையை இந்தியா உயர்த்தியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, பூடான், திபெத் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் டோகாலாம் பகுதி உள்ளது. திபெத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் பகுதியாக அறிவித்துவிட்ட சீனா, டோகாலாம் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அப்பகுதிக்குள் கடந்த ஜூன் 16ஆம் தேதி அத்துமீறி நுழைந்த சீன இராணுவத்தினரை முன்னேறவிடாமல் இந்திய இராணுவம் தடுத்து விட்டது.

இதனால், கடும் ஆத்திரமடைந்த சீனா, இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து போர் மிரட்டல் விடுத்து வருகிறது. டோகாலாம் விவகாரம் குறித்து பேச்சு நடத்தத் தயார் என்று இந்தியா அறிவித்துவிட்டபோதிலும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை இந்தியா வாபஸ் பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம் என்று சீனா கூறிவருகிறது.

இதனால், எல்லையில் கடந்த 3 மாதங்களாகப் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு எல்லைக்கு கூடுதலாக இந்திய இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலத்தையொட்டிய 1,400 கி.மீ. தொலைவு சீன எல்லையின் முக்கிய நிலைகளுக்கு, அதிக அளவில் இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

டோகாலாம் விவகாரத்தில் சீனாவின் தவறான நிலைப்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சீன எல்லையில் வீரர்கள் முழுஅளவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer