Monday, August 14, 2017

ஈழத் தமிழர்களின் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்ந்து வருவது வேதனையளிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தங்கம்மா முதியோர் இல்ல திறப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “30 வருடகால கொடிய யுத்தத்தின் பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் நிறுவப்பட்ட வடக்கு மாகாண சபையில் அண்மைக்காலமாக நடைபெறும் விடயங்கள் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஏற்கனவே மத்தியிலுள்ள நல்லாட்சியில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவருகின்ற நிலையில், மாகாண சபையில் நடைபெறும் நிகழ்வுகள் கேலிக்கூத்தானவையாக பேசப்படுகின்றது.

மஹிந்த அரசாங்கத்தின் மேல் கொண்ட வெறுப்பின் பிரதிபலிப்பாக மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தை நிறுவுவதற்கு தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியிருந்தனர். இதன்மூலம் தமக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்தனர். எனினும் அதுவும் கடந்தகாலங்களில் நடைபெற்றது போன்று கானல் நீராக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளது.

நிரந்தர அரசியல் தீர்வுக்கான தெரிவுக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டு பலமாதங்கள் ஆகியும், இதுவரை அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது காலங்கடத்தப்பட்டு வருகின்றமை இந்த அரசிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

இப்படியான சூழ்நிலையில் வடக்கு மாகாண சபையில் அறைகுறையான அதிகாரங்களை கொண்டு பல சவால்கள் மத்தியில் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும்; எங்களையும் வீண்பழி சுமத்தி வேலை செய்யமுடியாமல் தடுக்கின்றனர். அரசியல் போட்டி காரணமாகவும் தங்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லையென்ற பொறாமையிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மை மக்கள் சேவை செய்யாது தடுத்துவருகின்றனர்.

இந்த மாகாணத்திற்கான அனைத்து அமைச்சுக்களுக்குமான ஐந்து வருடத்திற்கான மொத்த நிதியொதுக்கீட்டை விட அதிகமாக நிதியை தனியொரு அமைச்சிற்காக மத்திய சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் வெளிநாட்டு நிதி வழங்குனரிடமிருந்து மாகாணத்திற்கு கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டவன் நான்.

மாகாணத்திலுள்ள ஐந்து அமைச்சுக்களில் மாகாணத்தின் சுகாதார அபிவிருத்திக்காக துறைசார் நிபுணர்களின் ஆலோசனையுடன் ஒரு நீண்டகால அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தவன் நான். அதன்பால் அபிவிருத்தி திட்டங்களையும் செய்து வருகிறேன். எனினும் என்மீது வீண்பழி சுமத்தி அதனை தடுப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்காகவே காட்டிக்கொடுப்புகளையும், குழிபறிக்கும் வேலைகளையும் அவர்கள் செய்துவருகின்றனர். எனினும் வாக்களித்த எனது மாவட்ட மக்களுக்கும், இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மாகாண சபை உறுப்பினராக தொடர்ந்தும் பாடுபடுவேன்.

ஏற்கனவே வவுனியா மாவட்டத்தில் பாரிய சுகாதார அபிவிருத்திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வருடமும்; கனகராயன்குளம், சேமமடு, ஈச்சங்குளம் ஆகிய இடங்களில் புதிய கிராமிய வைத்தியசாலைகளை அமைப்பதற்கு நிதியொதுக்கீடுகளை செய்துள்ளேன்.

தமிழ் மக்களின் கலாசாரத்தில் சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் என்பன வேண்டப்படாதவை. தாங்கள் வணங்கும் கடவுளைவிட தாய் தந்தையரை மேலாக பார்க்கும் சமூகம் எமது சமூகம். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அழைக்கின்றோம். எனினும் இந்த நீண்ட கொடிய யுத்தம் எமது மக்களின் உயிர்கள், உடமைகளை மட்டும் அழித்துவிடவில்லை. எங்களின் நீண்ட வரலாற்றைக்கொண்ட பாரம்பரியங்களையும் அழித்துள்ளது. இதன் பக்க விளைவுதான் இவ்வாறான முதியோர் இல்லங்கள் தேவைப்படும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.

முற்காலத்தில் குழந்தைகளை பெற்றோரும் பிற்காலத்தில் பெற்றோர்களை குழந்தைகளும் பராமரிப்பதே பண்பு. ஆனாலும் இவ்வாறான முதியோர் இல்லங்கள் காலத்தின் தேவையாக தற்போது உள்ளது. வயதான காலங்களில் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த, காணமால் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர், நாட்டின் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளை வெளிநாடுகளுக்க அனுப்பிய பெற்றோர் என பிள்ளைகளின் அரவணைப்பின்றி எத்தனையேயா பெற்றோர் மிகவும் கஸ்டப்படுகின்றனர். இவ்வாறனவர்களுக்கு இதுபோன்ற முதியோர் பராமரிப்பு இல்லங்கள் நிச்சயம் ஆறுதலை கொடுக்கும். அந்த வகையில் கனகராயன்குளத்தை பிறப்பிடமாக கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் தனது தாயரின் நினைவாக இவ்வாறானதொரு இல்லத்தை திறந்துவைத்திருப்பதானது காலத்தின் தேவையறிந்து செய்த மாபெரும் சேவையாகவே பார்க்கின்றேன்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer