Sunday, August 27, 2017

சினிமா, ஒரு கலை என்பதைத் தாண்டி,ஒரு கொண்டாட்டமாக, மிகப்பெரிய வணிகமாக மாறுவதில், முக்கியமாக தமிழ்நாட்டில், நாயகர்களின் பங்கு மறுக்க முடியாதது.  ஒரு புகழ் பெற்ற ஹீரோவின் படம் வெளியாகும் பொழுது நிகழும் வணிகமும் கொண்டாட்டமும் பெரிது. படம், வசூலிக்க வேண்டிய தொகையில் பெரும் பகுதியை முதல் மூன்று, நான்கு நாட்களிலேயே வசூலித்து விடும். அந்த ஹீரோவின் ரசிகர்கள் தரும் கொடை அது. அதனால் தான், பெரிய ஹீரோக்களின் படங்கள், பெரும்பாலும் அவர்களின் ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப்படுகின்றன. ஆனால், ஒரு திரைப்படம் முழுமையான வெற்றியைப் பெற அந்த ஹீரோவின் ரசிகர்கள் மட்டுமே பார்த்தால் போதுமா என்பது கேள்விக்குறி.

திரையுலகில் நடிகர் அஜித்குமாரின் இருபத்தி ஐந்தாம் ஆண்டில் வந்திருக்கும் திரைப்படம் 'விவேகம்'.  AK என்கிற அஜய் குமாரான அஜித்தின் மனைவி யாழினியாக காஜல் அகர்வால், விவேக் ஆனந்த் ஓபராய், அக்ஷரா ஹாசன்,  கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் படத்தை 'வீரம்', 'வேதாளம்' வெற்றிக் கூட்டணியின் விளைவாக இயக்கியிருக்கிறார் சிவா.  சர்வதேச தீவிரவாதத் தடுப்புக் குழுவின் அங்கமாக    செர்பியாவிலிருந்து செயல்படுகிறார் அஜித். இவரது குழுவில் விவேக் ஓபராய் உள்ளிட்ட நான்கு பேர் இருக்கின்றனர். தீவிரவாதிகளால், சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் இந்தியாவில், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு செயற்கை நிலநடுக்கத்தை உருவாக்கி மக்களைக் கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது. இதைத் தடுக்கும் பொறுப்பு அஜித் அண்ட் டீம்மிற்கு. இடையில் துரோகத்தின் வலி, காதலின் பலம், எல்லாம் சேர்த்து,  தமிழில் அதிகம் செய்யப்படாத வகையில் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தைத் தர முயன்றிருக்கிறார் சிவா.

'வேதாள'த்தில் விமர்சிக்கப்பட்ட  உடலைக் குறைத்து, இன்னும் ஹேண்ட்சம்மாக, இன்னும் அதிக பக்குவமாக, இன்னும் சிறப்பான உடைகள் அணிந்து, இன்னும் கடினமான சண்டைக் காட்சிகள் எல்லாம் நடித்து, இன்னும் தன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த முயன்று, அதில் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் அஜித். கதைக்கென எதையும் செய்யத்தயாராய் இருந்திருக்கிறார் என்பது படத்தில் வெளிப்படையாக தெரிகிறது. காஜல் அகர்வாலுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. டூயட்டுக்கென மட்டுமில்லாமல் இறுதிக் காட்சி வரை உறுதியுடன் உடனிருக்கும் கதாபாத்திரம். சிறப்பாக நடித்திருக்கிறார்.  அக்ஷரா ஹாசன் சிறிது நேரமே வந்தாலும் 'நடாஷா'வாக கவர்கிறார். கருணாகரனின் இருப்பு, முதல் பாதிக்கு சற்று நகைச்சுவையை சேர்த்திருக்கிறது.   இதுவரை தமிழ் படங்களில் காட்டப்படாத நாடு, இடங்கள், நொடிக்கு பல ஃப்ரேம்கள் மாறி விறுவிறுப்பையும் பிரம்மாண்டத்தையும் காட்டும் கேமரா, உலக அரசியல் பற்றி ஒரு துளி என படம் எடுக்க நினைத்த சிவாவுக்கு வாழ்த்துகள். அதே நேரம் படத்தின் உருவாக்கத்தில் காட்டிய கவனம், கொட்டிய உழைப்பு, எழுத்தில் குறைந்திருக்கிறது. வெற்றியின் கேமராவும் ரூபனின் படத்தொகுப்பும் இணைந்து பல காட்சி விருந்துகளை வைக்கின்றன.அனிருத்தின் இசையில் பாடல்கள் மிகச்சசிறப்பு. பின்னணி இசையை ஆங்காங்கே குறைத்திருக்கலாம்.  

ஒரு பெரிய நாயகன் எதிர்கொள்ளும் வில்லன்களும் பலமாக இருந்து, அவனை எதிர்க்க நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் தான் ஒரு படத்தை விறுவிறுப்பாக்கும். ஆனால், இங்கு வில்லன் பாதி நேரம் அஜித்தை புகழ்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறார். விவேக் ஓபராயை வீணடித்திருக்கிறார்கள்.  இயக்குனர் சிவா, தான் அஜித்திடம் சொல்ல வேண்டியதையெல்லாம் படத்தில் விவேக் ஓபராயின் வசனமாக வைத்துவிட்டது போல் தோன்றுகிறது. நாயகனால் என்ன வேண்டுமானால் செய்ய முடியும் என்பது போல் காட்டிவிடுவதால், அவருக்கோ அவரது மனைவிக்கோ எந்த ஆபத்து வந்தாலும் நமக்கு பதட்டமே ஏற்படவில்லை. படத்தில் ,  என்னதான் ஹேக்கராக இருந்தாலும் அத்தனை வேகமாய் வழியில் தெரிவதையெல்லாம் ஹேக் செய்வது, அனைத்தையும் ஹோலோக்ராமில் கொண்டு வருவது, என  புதிய தொழில்நுட்பங்களாக பல பல விஷயங்களைத் தொடர்ந்து காமிப்பது சற்று ஓவர் டோஸ். எந்த நேரத்திலும் திரையில் ஏதேனும் எழுத்துகள் ஓடிக்கொண்டே இருப்பது    கதையில் ஏற்படும் திருப்பங்கள் நம்மைத் தாக்காமல் கடக்கின்றன. வெளிநாட்டுக் காரர்களை தமிழ் வசனம் பேச வைப்பதா அல்லது சப் டைட்டில் போடுவதா என்ற குழப்பம்  ஆங்காங்கே தெரிகிறது. 'சீக்ரெட் சொசைட்டி' போன்ற உலக அரசியல் விஷயங்களை ஊறுகாய் போல் தொட்டு, இரண்டு பேருக்குள் நடக்கும் யுத்தமாக குறைத்துக் காட்டப்படுகிறது.  படம் நெடுக, ஏன் அஜித்-காஜல் இடையிலான காட்சிகளிலும் கூட 'பன்ச்' வசனங்கள் போலவே எழுதப்பட்டு பேசப்பட்டிருக்கிறது. இப்படி பல விஷயங்கள் பின்னிழுக்கும் படத்தை அஜித்தும், அனிருத்தின் இசையும், கேமராவும் படத்தை 'ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்' என்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.

விவேகம், சில இடங்களில் வேகம், வேகம்... சில இடங்களில்  போதும் போதும்!!

0 comments :

Post a Comment

 
Toggle Footer