Thursday, August 3, 2017

அ.திமு.க.வையும், ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமிதான். மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. அம்மா அணியில் தற்போது உச்சக்கட்ட மோதல் வலுத்துள்ளது. அ.தி.மு.க. அம்மா அணிக்கு யார்? தலைமையேற்று நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சருக்கும் தலைமை நிலைய செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் வலுத்தது.

5ஆம் தேதி முதல் கட்சி அலுவலகம் வந்து, கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது. இதுகுறித்து விவாதிக்கவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை ஒன்றாக இணைப்பது தொடர்பாகவும் பேசுவதற்கு அவசர ஆலோசனை கூட்டத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று மாலை 4.30 மணி முதல் நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரத்தொடங்கினர். எடப்பாடி பழனிசாமி 5.28 மணி அளவில் கட்சி அலுவலகம் வந்தார். அதனைத் தொடர்ந்து 5.30 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மட்டுமின்றி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட செயலாளர் கலைராஜன் உள்பட பலர் கலந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எதைப்பற்றி விவாதிப்பது? என்பது குறித்தும் அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஒருசிலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. கூட்டம் 6.10 மணி அளவில் நிறைவடைந்தது.

ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

பதில்:– எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா எழுச்சியான முறையில் கொண்டாடப்படவேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவினை நனவாக்கும் பொருட்டு அதை சிறப்பாக செய்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

கேள்வி:– இரு அணிகள் இணைப்பு குறித்து பேசப்பட்டதா?

பதில்:– முதலமைச்சரும், அமைச்சர்களும், தலைமைக்கழக நிர்வாகிகளும் என எல்லோரும் நினைப்பது ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது தான். அந்த ஒருமித்த கருத்தோடு தான் நாங்கள் யாரையும் விடக்கூடாது. அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டும் என்கிற மனப்பான்மையோடு, எல்லோரும் தேவை என்ற அடிப்படையிலே பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படாமல் திறந்து வைத்து, அதன் பேரில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான சுமுக தீர்வு விரைவில் எட்டப்படும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.

கேள்வி:– திரை மறைவு பேச்சுவார்த்தையாகவே இருக்கிறது. வெளிப்படையான பேச்சுவார்த்தை ஏன் நடத்தவில்லை?

பதில்:– எங்கள் தரப்பில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தரப்பு குழு கலைக்கப்பட்டாலும், பேச்சுவார்த்தை கதவு மூடப்படவில்லை. அது பல மட்டங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

கேள்வி:– டி.டி.வி.தினகரன் கட்சி பணிகளை 5ஆம் தேதி முதல் ஆரம்பிக்க இருப்பதாக கூறி இருக்கிறார். உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:– நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை ஜெயலலிதா யாரும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக உருவாக்கி இருக்கிறார். அந்த இரும்பு கோட்டையை முழுமையாக்கி ஒரு கட்டுக்கோப்புடன் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் இருக்கிறது. மற்றவர்களை (டி.டி.வி.தினகரன்) பற்றி நாங்கள் கவலைகொள்வதாக இல்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer