நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது பற்றி ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மூவரடங்கிய குழுவே விஜயதாச ராஜபக்ஷவுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றி ஆராய்ந்து வருகிறது. இக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (21) தனது இறுதித் தீர்மானத்தை முன்வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்தது. எனினும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதா, இல்லையா? என்பது தொடர்பில் அன்றையதினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் ஆராயும் முகமாகவே பிரதமர் தலைமையிலான விசேட குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்துள்ளது.
இக்குழு எடுக்கும் தீர்மானத்துக்கமைய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும என்று முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளுக்கெதிரான வழக்குகள் தாமதமாவது மற்றும் தமக்கான கூட்டுப் பொறுப்புக்களை மீறி செயற்படுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியில் பலரும் யோசனைகளை முன்வைத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மத்திய செயற்குழுவில் விரிவாக ஆராயப்பட்டது என்கின்றபோதும் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்றது. இதன்போது பல அமைச்சர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
Saturday, August 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment