மக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை ஏற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் புதிய வரிச் சட்டத்தை சகல மக்களும் இணைந்து தோற்கடிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் நேற்று செவ்வாய்க்கிழமை துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை கொழும்பில் ஆரம்பித்தனர்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பெறுமதி சேர் (வற்) வரியை 15 வீதமாக அதிகரித்த அரசாங்கம், அத்துடன் நின்றுவிடாது மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் உத்தேச வரிச் சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
புறக்கோட்டை ரயில் நிலையத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தொழிற்சங்க தலைவர் கே.டி.லால்காந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் வகையில் கொண்டுவரப்படும் வரி சட்ட மூலங்களை எதிர்க்காது சமிக்ஞை விளக்குகள் போன்று செயற்படுகின்றனர்.
தமக்கு வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும் போது சபையில் கொண்டு வரப்படும் எந்தவொரு சட்டத்துக்கும் ஆதரவு வழங்குகின்றனர். வரப்பிரசாதங்களுக்காக அவர்கள் கைகளைத் தூக்குகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இல்லை. மிக மிகக் குறைந்த எண்ணிக்கையான மக்கள் பிரதிநிதிகளே அங்கு இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் வரப்பிரசாதங்களுக்காக பெயரளவில் உள்ள பொம்மைகளாக இருக்கின்றனர். இவர்களின் ஊடாக மக்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே சுமையை மேலும் அதிகரிக்கும் உத்தேச வரிச்சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.
உத்தேச வரிச்சட்ட மூலத்தின் ஊடாக வருடாந்தம் ஐந்து இலட்சம் அல்லது அதற்கு மேலதிகமான வருமானத்தை ஈட்டும் சகலரிடமும் வரி அறிவிடப்படவுள்ளது. இதுவரை காலமும் பதிவுசெய்யப்பட்ட துறைசார் நிபுணர்களிடம் மாத்திரமே வரி அறிவிடப்பட்டது. ஆகக் கூடியது 24 வீத வரி அறவிடப்படவுள்ளது. தொழில் புரிபவர்களுக்கு வருடாந்தம் 6 இலட்சம் ரூபாவரையான வருமானத்துக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் வீட்டு கடன்பெற்றிருந்தால் 12 இலட்சம் ரூபா வரை வரி விலக்கு இதுவரை வழங்கப்பட்டது. எனினும் உத்தேச சட்டமூலத்தில் இந்த விடயம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. எனவே சகலரும் வரி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் சுமை மேலும் அதிகரிக்கும்.” என்றுள்ளனர்.
Home
»
Sri Lanka
»
மக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரசாங்கம் சுமத்துகின்றது: ஜே.வி.பி குற்றச்சாட்டு!
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment