Wednesday, August 30, 2017

குறைந்த பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என சாமியார் குர்மீத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  ஆனால், பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு கருணை காட்ட முடியாது என நீதிபதி ஜக்தீப் சிங் கூறினார்.  இதையடுத்து குர்மீத்துக்கு இரண்டு பாலியல் பலாத்கார வழக்குகளிலும் தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  அபராதத்தொகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 14 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.  

நீதிபதியின் இந்த உத்தரவை அடுத்து தரையில் விழுந்து கண்ணீர் விட்டு கதறிய குர்மீத் ராம் ரஹீம் சிங், அந்த அறையில் இருந்து வ் வெளியேற மறுத்து அடம்பிடித்து தன்னை மன்னித்துவிடுங்கள் என்று கூச்சலிட்டபடி அழுதார்.   இதையடுத்து காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றனர்.  பின்னர் வழக்கமான மருத்துவ சோதனைகளுக்கு பின்னர் கைதிகளுக்கான சீருடை வழங்கப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டார்.

குர்மீது குற்றவாளி என  கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டபோது ஹரியானாவில் கலவரம் வெடித்தது.  பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் , டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.  இதன் காரணமாக குர்மீத்துக்கு செல்வாக்கு இல்லாத பகுதியான ரோக்தக் சிறையில் அடைக்கப்பட்டார்.  தண்டனை அறிவிப்பு முன்னரும், பின்னரும் ரோக்தக் சிறை வளாகப்பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
அரியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மீக அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரகீம் சிங்(வயது50) உள்ளார். சாமியாரான  இவர் தனது  இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2002ல் பிரதமருக்கு மொட்டை கடிதத்தில் புகார் வந்தது. அதன் அடிப்படையில் குர்மீத் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்த சிபிஐ, கடந்த 2007ம் ஆண்டு அம்பாலா நீதிமன்றத்தில் குர்மீத்  மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பிறகு இந்த வழக்கு அரியானாவில் உள்ள பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை  நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஜெகதீப் சிங், குர்மீத்தை குற்றவாளியாக அறிவித்தார். அவருக்கான தண்டனை 28-ம் தேதி அறிவிக்கபடும் என நீதிபதி கூறினார்.

இதையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த  கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர்.  ஆதரவாளர்களால் மீண்டும்  கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாலும், தீர்ப்பு வழங்கும் நீதிபதியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், சுனாரியா சிறைக்கே அவரை அழைத்து  சென்று தீர்ப்பை வழங்க வேண்டும் என்று பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, நீதிபதி ஜெகதீப் சிங் இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக சுனாரியா சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். தீர்ப்பு வழங்குவதற்காக சிறைக்குள் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதனால்,  நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்பகுதியில் யாரும் நுழையாத வகையில் ஆயிரக்கணக்கான போலீசார்  குவிக்கப்பட்டனர்.  ஆதரவாளர்களை திரட்டி வன்முறையில் ஈடுபடக் கூடிய குர்மீத்தின் முக்கிய சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer